ஊரடங்கு காலத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் காணொலி காட்சி மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை


ஊரடங்கு காலத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் காணொலி காட்சி மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2020 4:30 AM IST (Updated: 25 April 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காலத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் காணொலி காட்சி மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

கோவை,

இந்தியாவில் ஊரக பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதுடெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

கொரோனா ஒழிப்பு பணிகள் தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சி துறை மந்திரி, மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் எடுக்கப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்து கூறினேன். கொரோனா நோய் தடுப்பிற்காக பிரதமர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தேன்.

ரூ.1,254 கோடி விடுவிக்க கோரிக்கை

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய 14-வது நிதிக்குழு மானியம் அடிப்படை மானிய மீதி தொகை ரூ.548.76 கோடி, செயலாக்க மானியம் ரூ.705.62 கோடி ஆக மொத்தம் ரூ.1,254.38 கோடியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மத்திய அரசு 2020-21-ம் நிதியாண்டிற்கு 27 கோடி மனித சக்தி நாட்கள் அனுமதித்து உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.1995.75 கோடி ஊதியக்கூறாகவும், ரூ.665 கோடி பொருட்கூறாகவும், 15.1.2020 முதல் 31.3.2020 வரை உள்ள தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை ரூ.675 கோடியும், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. ஊதிய நிலுவை ஏதும் இல்லை.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க பணியாளர்களுக்கு அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கே சென்று எளிதில் வழங்கும் வகையில் ரொக்கமாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

விருதுகள்

இவை தவிர தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சிறப்பினமாக இத்திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்தில் பணிபுரிந்தமைக்காக, 2 நாட்களுக்கான சிறப்பு ஊதியத் தொகையான ரூ.123 கோடியை 26.84 லட்சம் தொழிலாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2020- 21-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ஊதியம் ரூ.229-ல் இருந்து ரூ.256 என தமிழக அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட ரூ.27 அதிகமாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசு இதுவரை 8 மாநில அளவிலான தேசிய விருதுகள், 13 மாவட்ட அளவிலான தேசிய விருதுகள், ஊராட்சி ஒன்றிய அளவிலான 1 விருது மற்றும் 4 கிராம ஊராட்சி அளவிலான விருதுகள் என மொத்தம் 26 விருதுகள், ஊரக வளர்ச்சித் துறைக்கு 104 தேசிய விருதுகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு மூன்றடுக்கு ஊரக ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் 2020-ம் ஆண்டிற்கு மத்திய அரசு தமிழகத்திற்கு 3 விருதுகளை அறிவித்துள்ளது. வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்தமைக்கான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ கிராம சபை தேசிய விருது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த களவனூர் கிராம ஊராட்சிக்கும், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்காக திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு தேசிய அளவில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட விருதும், குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருதை விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் அனுமந்தபுரம் கிராம ஊராட்சி தேர்ந்தெடுத்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2016-17 முதல் 2018-19 வரையில் தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 3.27 லட்சம் வீடுகளில், அனைத்து வீடுகளுக்கும் ஒப்புதல் அளிக் கப்பட்டு இதுவரையில் 2.17 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2019-20ம் ஆண்டில் மத்திய நிர்ணயித்த 2 லட்சம் வீடுகளில் இதுவரை 64,035 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதில் இதுவரை 10,245 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகத்தில் 19,214 சுய உதவி குழுக்கள் அடங்கிய 57,642 சுய உதவி குழு உறுப்பினர்கள், 45.71 லட்சம் முக கவசங்களையும் 76 ஆயிரம் லிட்டர் சானிடைசர்களையும் 57 ஆயிரம் லிட்டர் கை கழுவும் திரவங்களையும் தயாரித்து வழங்கியுள்ளனர். இவை தவிர, 98,411 சுய உதவி குழு உறுப்பினர்கள், சமுதாய சமையல் கூடங்களில் பணியாற்றி, இதுவரை 4.74 லட்சம் மக்களுக்கு உணவுகள் வழங்கியுள்ளனர்.

6 லட்சம் முக கவசம்

25 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுய உதவி குழு உறுப்பினர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். டி.டி.யு.ஓ.கே.ஒய். திட்டத்தின் கீழ் 540 பயிற்சி பெற்ற நபர்கள் அரசு மருத்துவமனைகளில் சுகாதார பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரக சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பயிற்சி பெற்ற சுய உதவி குழு உறுப்பினர்கள் 6 லட்சம் முக கவசங்களையும் தயாரித்து உள்ளனர். வங்கிகள், ரூ.507 கோடி அளவிற்கு 845 சுய உதவி குழுக்களுக்கு முக கவசங்கள், சானிடைசர்கள் மற்றும் கை கழுவும் திரவங்கள் தயாரிக்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து முதல்- அமைச்சரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Next Story