3 வாலிபர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த போலீசார்: ஆம்புலன்சுக்குள் அலறித்துடித்த வீடியோவை வெளியிட்டு விழிப்புணர்வு


3 வாலிபர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த போலீசார்: ஆம்புலன்சுக்குள் அலறித்துடித்த வீடியோவை வெளியிட்டு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 25 April 2020 5:30 AM IST (Updated: 25 April 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வீதியில் ஜாலியாக வலம் வந்த 3 வாலிபர்களை போலீசார் கொரோனா நோயாளி போல் முழுகவசம் அணிந்து இருந்தவர் இருந்த ஆம்புலன்சுக்குள் தள்ளி விட்டனர். அங்கு அவரை பார்த்ததும் 3 பேரும் அலறித்துடித்த காட்சியை வீடியோவாக பதிவு செய்தனர். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

திருப்பூர், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் ரோட்டில் சுற்றித்திரிய வேண்டாம் என்று போலீசார் பலமுறை அறிவுறுத்தினாலும், நூதன தண்டனைகளை வழங்கினாலும், வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வந்தாலும் கூட, ரோட்டில் இருசக்கர வாகனங்களில் பறக்கும் வாலிபர்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

இதுதவிர காட்டுப்பகுதியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து விளையாடுவது என்று தொடர்ந்து நடந்து வருகிறது. இவர்களை கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானம் மூலமாக போலீசார் கண்காணித்து அவர்களை விரட்டியடித்த சம்பவம் ஏற்கனவே நடந்து இருக்கிறது. திருப்பூர் மாநகரில் திருமுருகன்பூண்டி போலீசார் கணியாம்பூண்டி காட்டுப்பகுதியில் கேரம் விளையாடிய வாலிபர்களை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணித்ததையும், கேமராவை கண்டதும் கேரம் போர்டை தலையில் தூக்கி வைத்து ஓடிய வாலிபர் வீடியோவும் சமூக வலைதளங்களில் தமிழகம் முழுவதும் பரவியது.

அதுபோல் முககவசம் அணியாமல் வந்த 3 வாலிபர்களுக்கு போலீசார் அதிர்ச்சி அளித்த ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்லடம் நகரில் மங்கலம் குற்றறப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 5 வாலிபர்கள் ஜாலியாக வலம் வந்தனர். அதிலும் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் யாரும் முககவசம் அணியவில்லை. அவர்களிடம் முதலில் போலீசார் அறிவுரை கூறினார்கள். பின்னர் முககவசம் அணியாவிட்டால் என்ன பாதிப்பு வரும் என்று கூறியதுடன் அருகே நிறுத்தி வைத்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் முதலில் 3 பேரை ஏற்றினார்கள்.

ஆம்புலன்சுக்கு உள்ளே முழு உடற்கவசம் அணிந்து கொரோனா நோய் தாக்கப்பட்டவர் போல் ஒருவர் முககவசம் அணிந்து படுத்திருந்தார். அவரை கண்டதும் 3 வாலிபர்களும் அலறியடித்தபடி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறி ஆம்புலன்சில் இருந்து வெளியே வர துடித்தனர். ஜன்னல் வழியாக வெளியே வாலிபர் ஒருவர் குதித்தார். அந்த நபரின் அருகே செல்ல பீதியடைந்து ஆம்புலன்சு வாகனத்தின் ஓரமாக ஓட்டியபடியும் வாலிபர்கள் மரண பயத்தில் செய்தவை கேமராவில் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபர்களிடம் போலீசார், கொரோனாவுக்காக வீட்டில் இருங்கள் என்று கூறினால் வீதியில் சுற்றித்திரிகிறீர்கள். ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நபரை போன்ற ஒருவரிடம் நெருங்குவதற்கு கூட பயப்படுகிறீர்கள்.இவ்வளவு பயம் இருந்தும் வீதியில் ஏன் சுற்றுகிறீர்கள். நோயின் வீரியத்தை புரிந்து கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்து திருப்பூர் மாவட்ட மக்களிடம் போலீசார் விழிப்புணர்வுக்காக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வீடியோவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த வாலிபர்கள் அலறியடிக்கும் காட்சிகளை பார்த்தால் அனைவருக்கும் சிரிப்பை வரவழைக்கும் வகையில் இருந்தாலும் கொரோனா நோயாளியின் அருகில் நெருங்க எப்படி பயம் இருக்கும் என்பதையும் தெரிவிக்கவே இந்த விழிப்புணர்வு வீடியோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ திருப்பூர் மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் வேகமாக நேற்று பரவியது.

Next Story