சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி - கலெக்டர் தகவல்


சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 April 2020 4:00 AM IST (Updated: 25 April 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 1,471 பேர் வந்தனர். அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்களது செல்போன் எண்களை தொடர்பு கொண்டு நலமாக இருக்கிறார்களா? என்று விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது 1,471 பேரும் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து, கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வீட்டு கண்காணிப்பில் யாரும் இல்லை.

நீலகிரியில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 7 பேர் குணமடைந்து திரும்பி உள்ளனர். அவர்கள் தங்களது வீடுகளில் தனி அறைகளில் 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 2 பேர் ஓரிரு நாட்களில் குணமடைந்து திரும்புவார்கள். நமது மாவட்டம் பச்சை பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும்.

ஒத்துழைப்பு

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகிறவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி தென்பட்ட ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைகாட்டி ஆகிய 4 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. அடுத்த மாதம்(மே) 7-ந் தேதி தனிமைப்படுத்துதல் முடிவடையும். அப்பகுதி பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். தோட்டக்கலை, வேளாண் பணிகளை சமூக இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிந்து தொழிலாளர்கள் பணிபுரியலாம். தேயிலை தொழிற்சாலைகள் குறைந்த தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. சமூக இடைவெளி கடைபிடிக்காதது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். நீலகிரியில் இறைச்சி கடைகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்றால் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story