பூம்புகார் நகரில் அத்தியாவசிய பொருட்கள் கேட்டு தடைப்பகுதியை தாண்டிய பொதுமக்கள் - திடீர் பரபரப்பு
ஈரோடு பூம்புகார் நகர் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கேட்டு தடைப்பகுதியை தாண்டிய பொதுமக்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருக்கிறது. இங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இங்கு தினசரி காய்கறி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பி.பி.அக்ரஹாரம் பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்றுக்காலை திடீரென்று அவரவர் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள். அவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதியை தாண்டி ஒட்டு மொத்தமாக வெளியே வந்தனர். அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார் அவர்களை தடுத்தபோது, எங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் பி.பி.அக்ரஹாரம் கிராம நிர்வாக அதிகாரி கோமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
பூம்புகார் நகர் பகுதி முற்றிலும் ஏழை கூலித்தொழிலாளிகள் நிறைந்த பகுதி. இங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 180 பேர் இருக்கிறோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, எங்கள் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட நாள் முதல் இங்கு அமைதியாக இருந்து வருகிறோம். எங்களிடம் கையில் இருந்த பணம், அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கிய பணம் என்று முற்றிலும் தீர்ந்து விட்டது. இப்போது எங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு பால் வாங்கவும் முடியவில்லை.
வேலை இல்லாமல் வருவாயும் இல்லாமல் வேதனைப்படுகிறோம். எங்கள் பகுதிக்கு யாரும் பொருட்கள் தந்து உதவவும் இல்லை. எனவே எங்களுக்கு தேவையான பொருட்களை விரைந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் தனிமைப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டியது இருக்கும் என்றார்கள்.
அவர்களிடம் கிராம நிர்வாக அதிகாரி கோமதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அனைத்து பொருட்களும் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்த கலைந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story