மாவட்டத்தில் ஒரு மாதத்தில் சாராயம், ‘கள்’, மதுபானம் விற்ற 229 பேர் கைது


மாவட்டத்தில் ஒரு மாதத்தில் சாராயம், ‘கள்’, மதுபானம் விற்ற 229 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2020 4:30 AM IST (Updated: 25 April 2020 2:23 AM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராயம், ‘கள்‘ மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 229 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதையொட்டி மதுபான கடைகள் மற்றும் பார்களை திறக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி சிலர் நாமக்கல் மாவட்டத்தில் சாராயம், ‘கள்‘ மற்றும் போலி மதுபானங்கள் விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி போலீசாருக்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பிரிந்து போலீசார் சோதனை நடத்தினர். இதில் சிலர் சாராயம் மற்றும் கள் விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிலர் அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவைகளை பறிமுதல் செய்த போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஒரு மாதத்தில் சாராயம், ‘கள்’ மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் 229 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் இந்த சோதனைகளின்போது 87 லிட்டர் சாராயம், 470 லிட்டர் ‘கள்‘, 12 ஆயிரத்து 277 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4,062 லிட்டர் சாராய ஊறலும் அழிக்கப்பட்டது. அதேபோல் சட்டவிரோத விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்களும், 27 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story