கொரோனா பரவல் பீதி: வனத்துறை சோதனை சாவடியில் திரண்ட கொல்லிமலை ஊராட்சி தலைவர்கள்
கொரோனா பரவல் பீதியால் காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியில் திரண்ட ஊராட்சி தலைவர்கள், கொல்லி மலைக்கு வாகனங்களை இயக்க முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மலைக்கு தற்போது வந்து செல்பவர்கள் அடையாள அட்டை, மருந்து சீட்டு, அதிகாரிகள் கடிதம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை காண்பித்து விட்டு அலுவலக பணி, விவசாய பணி உள்ளிட்ட ஒரு சில பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி மருத்துவ குழுவினர் தகுந்த சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு பிரதான சாலை செல்கிறது. அங்கிருந்து அடிவாரத்துக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவும், மலை பகுதிக்கு சென்று அடைய அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவும் கடந்தால் போதுமானது. இதனால் அந்த வழியாக வருபவர்களால் கொல்லிமலை பகுதியிலும் விரைவாக கொரோனா பரவி விடுமோ என்ற பீதி மலைவாழ் மக்களிடையே எழுந்துள்ளது.
இதையடுத்து கொல்லிமலையில் உள்ள 14 ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் நேற்று காலை சுமார் 11 மணியளவில் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வனத்துறை சோதனை சாவடிக்கு திரண்டு வந்தனர். அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து நின்ற அவர்கள், அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சுமதி, வனகாப்பாளர் விஜயபாரதி, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோரிடம் கொல்லிமலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்வது குறித்து தெரிவித்தனர்.
மேலும் மலைப்பகுதிக்கு மறைமுகமாக வரும் சிலரால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த எவரேனும் அங்கு சென்று வரும் வாய்ப்பு உள்ளது. எனவே மலைப்பகுதிக்கு மிளகு லோடுடன் அதிகாரி அனுமதியுடன் செல்லும் வாகனங்கள் உள்பட எந்த ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் மேலே சென்று வர அனுமதிக்க வேண்டாம், முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தோட்டக்கலை துறை மூலமும், உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமும் நாங்களே காய்கறிகள் சப்ளை செய்து கொள்கிறோம். அதேபோல அனைத்து துறையினர் உதவியுடன் மற்ற பணிகளையும் செயல்படுத்துகிறோம். எனவே அரசு அறிவித்துள்ள ஊரடங்கு இறுதி தேதி வரை கொல்லிமலைக்கு வாகனங்களை இயக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story