நாமக்கல்லில் சரக்கு வாகன உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

நாமக்கல்லில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சரக்கு வாகன உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சிறப்புக்குழு அலுவலர்கள் முனியநாதன், அபய்குமார் சிங் ஆகியோர் தலைமையில் நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சரக்கு வாகன உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல சிறப்புக்குழு அலுவலர்களான ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் முனியநாதன், காவல்துறை கூடுதல் இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அர.அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மண்டல சிறப்புக்குழு அலுவலர்கள் பேசியதாவது:- இன்றைய சூழலில் லாரி டிரைவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது உணவுத்தேவைக்காகவும், டீ, காபி ஆகியவற்றை குடிக்கவும் கடைகளுக்கு செல்லவேண்டி இருக்கும். அப்போது நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
வெளிமாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்களையே உணவு தயாரித்து சாப்பிட அறிவுறுத்த வேண்டும். டிரைவர் மற்றும் கிளனரை 1 மீட்டர் இடைவெளி விட்டு உட்கார அறிவுறுத்த வேண்டும். எதற்காகவும் தேவையற்ற நபர்களை லாரிகளில் ஏற்றக்கூடாது. மேலும் லாரிகளில் ஸ்டியரிங், அமரும் இடங்கள், கதவு கைப்பிடிகள் என அதிகம் பயன்படுத்தும் இடங்களில் கிருமி நாசினி அடிக்கடி தெளிக்கவேண்டும்.
லாரிகளில் டிரைவர் அமரும் அறையில் துணிகளை பயன்படுத்த வேண்டாம். துணிகளில் கொரோனா வைரஸ் கிருமி எளிதில் தொற்றிக்கொள்ளும். வெளிமாநிலங்களுக்கு சென்றுவரும் வாகனங்கள் நாமக்கல் மாவட்டத்திற்குள் நுழையும்போது சோதனை சாவடிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமி நாசினி கட்டாயம் தெளிக்கவேண்டும். மேலும் அங்கு சுகாதாரத்துறையின் மூலம் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். 50 வயதிற்கு மேற்பட்டோரை பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கவேண்டும்.
லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மூலமாக டிரைவர்களில் தீவிரமான சளி, காய்ச்சல் கண்ட நபர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களின் பட்டியல் தயாரித்து அவர்களுக்கு சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை வழங்க வேண்டும். இவ்வாறு சிறப்புக்குழு அலுவலர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் காசநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வழங்க தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா? என்றும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர மருத்து, மாத்்்திரைகள் வழங்கப்பட்டு உள்ளதா? என்பதையும் சிறப்புக்குழு அலுவலர்கள் கேட்டறிந்தனர். மேலும், ரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டிய நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரி வசதிகள் குறித்த விவரங்களையும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) சித்ரா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம் உள்பட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story