வேலூர் அம்மா உணவகத்தில் 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வேலூர் அம்மா உணவகத்தில் 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
வேலூர்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுரையின்படி வேலூர் அண்ணாசாலையில் உள்ள அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக 3 வேளை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று பொதுமக்களுக்கு இலவச உணவு மற்றும் முகக் கவசங்களை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அம்மா உணவக பணியாளர்களுக்கு சுகாதாரமாக உணவகத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் சுத்தமான உணவை கையுறை, முகக் கவசம் அணிந்து தயாரித்து வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
பொதுமக்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும். முதல்-அமைச்சரின் அறிவுரைகளை பின்பற்றினால் கொரோனா என்னும் கொடிய நோயை தமிழகத்தில் இருந்து விரட்ட முடியும். பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து நோய் பரவாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், என அமைச்சர் கூறினார்.
விழாவில் வேலூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி ராஜசேகர், பகுதி நிர்வாகிகள் முனுசாமி, மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தினமும் 1,500 பேர் உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனனீசதீஷ்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story