அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை பெற்று தருவதாகக் கூறி பண வசூலில் ஈடுபட்டால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை பெற்று தருவதாகக் கூறி பண வசூலில் ஈடுபட்டால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 April 2020 4:15 AM IST (Updated: 25 April 2020 2:43 AM IST)
t-max-icont-min-icon

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பண வசூலில் ஈடுபட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 39 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் ஏற்கனவே 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதைத்தொடர்ந்து நேற்றும் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 7 பேரில் மேல்விஷாரத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர், கல்மேல்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர், அரக்கோணத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர். மீதமுள்ள 16 பேரில் 11 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், 5 பேர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாலாஜா அரசு மருத்துவமனையில் நேற்று சளி, இருமல் போன்ற அறிகுறியுடன் வந்தவர்கள் 5 பேருக்கு சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வந்ததும், பாதிப்பு இல்லை என்றால் வீடுகளுக்கு அனுப்பி வைத்து தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படும்.

கடும் நடவடிக்கை

மார்ச் மாதம் 23-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை பார்த்த நாட்களுக்குரிய சம்பளத்தைப் பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும். அதற்கு பின்னர் அரசின் உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும். அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை குறித்து அரசு ஏற்கனவே அறிவித்துள்ள பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை பெற்று தருவதாகக்கூறி பண வசூலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு அறிவித்துள்ள பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஊரடங்கு செய்யப்பட்டுள்ள நாட்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறித்து இதுவரை எந்த உத்தரவும் இல்லை. 

பிரதமர், முதல்-அமைச்சர் ஆகியோர் தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். பட்டங்கள் பறக்க விடுவதில் தவறில்லை. ஆனால் பட்டங்கள் பறக்க விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story