காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தும் இடங்கள் எவை எவை? - கலெக்டர்கள் அறிவிப்பு


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தும் இடங்கள் எவை எவை? - கலெக்டர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 April 2020 11:00 PM GMT (Updated: 24 April 2020 10:07 PM GMT)

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தும் இடங்கள் எவை எவை? என்பது பற்றி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

காஞ்சீபுரம், 

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட சில அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டம்

சென்னை மாநகராட்சி பகுதிக்கு அருகில் உள்ள காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சி, குன்றத்தூர் பேரூராட்சி மற்றும் சென்னையை ஒட்டியுள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை, மவுலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட காஞ்சீபுரம் மாவட்ட பகுதிகள் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்

அதுபோல சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம் மற்றும் பல்லாவரம் வட்டத்திலுள்ள தாம்பரம் பெருநகராட்சி, பல்லாவரம் பெருநகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, மற்றும் பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம் ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலாம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலூர், கவுல்பஜார், சித்தாலபாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகிய 15 கிராம ஊராட்சிகள் மற்றும்

திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கானாத்தூர் ரெட்டிக்குப்பம் மற்றும் முட்டுக்காடு (பகுதி) ஆகிய 2 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்ட பகுதிகள் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்படும்.

மாநகராட்சிக்கான கட்டுப்பாடு

இந்தப் பகுதிகளில் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 29-ந் தேதி (புதன்கிழமை) இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும். ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதித்துள்ள கட்டுப்பாடுகள், இந்த 2 மாவட்டங்களில் தற்போது அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கும் பொருந்தும்.

இதற்கான அறிவிப்பை 2 மாவட்ட கலெக்டர்களும் நேற்று வெளியிட்டனர்.

Next Story