திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் மருத்துவ கருவிகள் கொள்முதல் அமைச்சர் காமராஜ் தகவல்
திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
கபசுர குடிநீர்
திருவாரூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜமூர்த்தி, துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, நகராட்சி ஆணையர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
29 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 2,500 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் 29 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 9 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 3 பேர் இன்றைய (நேற்று) தினம் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு செல்ல உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 56 ஆயிரத்து 773 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 83 ஆயிரத்து 561 பேரின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறதா? என்பது குறித்து சுகாதார பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய பரிசோதணை செய்யப்பட்டு வருகிறது.
நிவாரண தொகை-பொருட்கள்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை ஆகியவர்களின் பணி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
கொரோனா வைரஸ் நிவாரண தொகையானது 98.50 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. பொருட்களை பொறுத்தமட்டில் 95 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் மத்திய அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் மட்டும்தான் கொடுத்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் முதலில் நிவாரண அறிவிப்பை அரசு அறிவித்து அந்த பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது தொடர்ந்து மத்திய அரசு அறிவித்த நிவாரணமும் வழங்கப்படும்.
ரூ.1.25 கோடியில் மருத்துவ கருவிகள்
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ கருவிகள், எம்.எல்.ஏ., எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 3-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா? இல்லையா? என்பது குறித்து பிரதமர், முதல்- அமைச்சர் ஆகியோர் முடிவெடுப்பார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முன்னதாக திருவாரூர் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவல கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ கருவிகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
மன்னார்குடி
மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 250 தூய்மை பணியாளர்களுக்கு ஒன்றியத்தின் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை, காய்கறி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் சேரன்குளம் மனோகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கி 250 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானம், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்னிலம்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தூய்மை பணியாளர்கள் தொண்டு உள்ளத்தோடு பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரிசி மற்றும் மளிகை பொருட்களை தமிழகம் முழுவதும் வழங்கி வருகின்றனர். அதன்படி நேற்று நன்னிலம் பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் அரிசி, மளிகை பொருட்கள், வேட்டி, சேலை மற்றும் முககவசம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அனைவரும் சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். இதில் முன்னாள் எம்.பி. கோபால், நன்னிலம் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், துணை தலைவர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், நன்னிலம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுவாதி கோபால், நகர செயலாளர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story