டாக்டரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் கலவரம்: கைதான 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி


டாக்டரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் கலவரம்: கைதான 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 25 April 2020 4:30 AM IST (Updated: 25 April 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துபோன டாக்டரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 10 பேரின் ஜாமீன் மனுவை சென்னை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி தனது உத்தரவில், மனுதாரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னையில் தனியார் மருத்துவமனை டாக்டர் சைமன் ஹெர்குலஸ்(வயது 56) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு எடுத்து சென்றபோது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், வேலங்காடு சுடுகாட்டுக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கேயும் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியினர் கலவரத்தில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தினர். மேலும், அங்கிருந்த அரசு ஊழியர்களையும் தாக்கினர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட அன்னை சத்யாநகரைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான இளங்கோ, லோகேஸ்வரன், செந்தில்குமார், அண்ணாமலை, ஆனந்த்ராஜ், சோமசுந்தரம், குமார், மணிகண்டன், காதர் முகைதீன், நிர்மலா ஆகிய 10 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ‘நடந்த சம்பவத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீசார் எங்களை இந்த வழக்கில் தவறுதலாக சேர்த்துள்ளனர். எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி ஆர்.செல்வக்குமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வக்கீல்கள் மற்றும் அரசு தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மதிக்காமல் மனுதாரர்கள் அனைவரும் ஒன்றாக கூடி கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. மனுதாரர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொது கல்லறை தோட்டத்தில் டாக்டரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் மற்றவர்களும் இதையே முன் உதாரணமாக வைத்து குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவர்களது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story