வடமாநில தொழிலாளர்களால் கொரோனா ஏற்படுமோ என்ற அச்சத்தால் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


வடமாநில தொழிலாளர்களால் கொரோனா ஏற்படுமோ என்ற அச்சத்தால் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 April 2020 4:30 AM IST (Updated: 25 April 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக வந்த வடமாநில தொழிலாளர்களால், கொரோனா ஏற்படுமோ என்ற அச்சத்தால் துணை மின்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பாலையூர், 

குத்தாலம் அருகே மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக வந்த வடமாநில தொழிலாளர்களால், கொரோனா ஏற்படுமோ என்ற அச்சத்தால் துணை மின்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் முற்றுகை

கடலங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, குத்தாலம், வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, ஜெயங்கொண்டம், திருவெண்காடு, மணல்மேடு உள்ளிட்ட 15 துணை மின் நிலையங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நெய்வேலியில் இருந்து கடலங்குடி துணை மின் நிலையத்திற்கு உயர்அழுத்த மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பணியின் நிறைவாக கடலங்குடி ஊராட்சியில் உள்ள துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக வடமாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர். கடலங்குடி ஊராட்சி பொதுமக்கள், வடமாநில தொழிலாளர்களால் தங்கள் கிராமத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் நேற்று துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்த குத்தாலம் தாசில்தார் ஜெனிட்டாமேரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கடலங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவ பரிசோதனை

இதனை தொடர்ந்து நேற்று கடலங்குடி துணை மின்நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் நூருல்ஹக் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை செய்தனர்.

இதில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 20 பேருக்கும், துணை மின் நிலைய ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Next Story