விளைச்சல் அடைந்தும் வீணாகும் பருத்தி - விவசாயிகள் கண்ணீர்


விளைச்சல் அடைந்தும் வீணாகும் பருத்தி - விவசாயிகள் கண்ணீர்
x
தினத்தந்தி 25 April 2020 4:34 AM IST (Updated: 25 April 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

விளைச்சல் அடைந்தும் விற்க முடியாததால் செடிகளிலேயே வெடித்து பஞ்சாக பறக்கும் பருத்தியை பார்த்து விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சரியாக பெய்வதில்லை. இதனால் ஆறுகள், குளங்கள், அணைகள் என அனைத்து நீர்நிலைகளும் விரைவில் வறண்டு விடுகின்றன. எனினும், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். அதேபோல் மானாவாரி நிலத்திலும் பலர் விவசாயம் செய்ய தவறுவது இல்லை.

இதில் பருத்தி முக்கிய மானாவாரி பயிராக உள்ளது. திண்டுக்கல், காலாடிப்பட்டி, ரெட்டியார்சத்திரம், பழனி, நத்தம், வேடசந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பருத்தியை பொறுத்தவரை 3 மாதத்தில் விளைச்சல் அடைந்து அறுவடை செய்து விடலாம். அதன்பின்னர் 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக பருத்தி அறுவடை செய்யலாம். அதை மொத்தமாக வாங்கி சென்று பஞ்சு, விதையை தனித்தனியாக நீக்குவார்கள். இதற்காக தனியார் மில்கள் இயங்கி வருகின்றன.

அதன்பின்னரே பருத்தியின் பஞ்சு மூலம் தலையணை, மெத்தை ஆகியவை தயாரிக்க பயன்படுத்துகின்றனர். அதிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் பருத்திக்கு தமிழ்நாடு முழுவதும் நல்ல விலை கிடைக்கிறது. எனவே, பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அதில் பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்ட பருத்தி கடந்த மாதமே விளைச்சல் அடைந்து விட்டது. பொதுவாக அறுவடை தொடங்கியதும் வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் பருத்தியை கொள்முதல் செய்வார்கள். ஒருசில விவசாயிகள் பருத்தியை வாகனத்தில் ஏற்றி சென்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வார்கள்.

ஆனால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வியாபாரிகள் பருத்தியை வாங்குவதற்கு வரவில்லை. அதேபோல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு செல்வதற்கு வாகன அனுமதி பெற வேண்டும். மேலும் சரக்கு வாகனத்தை கொண்டு செல்வதற்கு சிறு விவசாயிகள் என்றால் பலர் சேர வேண்டும். தனியாக கொண்டு சென்றால் வாகனத்திற்கு அதிக வாடகை கொடுக்க நேரிடும். இதுபோன்ற சிக்கல்கள் உள்ளதால் அறுவடை செய்த பருத்தியை விவசாயிகள் வீட்டில் மூட்டை கட்டி வைத்துள்ளனர்.

மேலும் பருத்தி அறுவடைக்கு வரும் வேலையாட்களுக்கு கூலியாக ரூ.200 வழங்க வேண்டும். இது வருமானமின்றி தவிக்கும் விவசாயிகளால் முடியவில்லை. இதனால் குடும்பத்தினர் உதவியுடன் பருத்தியை அறுவடை செய்து வருகின்றனர். ஆனால், விளைந்த பருத்தியை முழுமையாக அறுவடை செய்ய முடியவில்லை. எனவே, செடிகளிலேயே பருத்தி காய்கள் வெடித்து பஞ்சாக பறக்கின்றன.

இதனால் விவசாயிகள் இயலாமையை நினைத்து வேதனை அடைந்து வருகின்றனர். மேலும் கடன் வாங்கி பயிரிட்ட பருத்தி வெடித்து காற்றில் பஞ்சாக பறப்பதை கண்ணீருடன் விவசாயிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அதிலும் சிறு, குறு விவசாயிகள் பெரும் சிரமத்தை அடைந்துள்ளனர். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பருத்தி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story