பசுமை மண்டலத்தில் உள்ள ராமநகர் சிறையில் பாதராயனபுரா வன்முறையாளர்களை அடைத்தது ஏன்? - குமாரசாமி கேள்வி


பசுமை மண்டலத்தில் உள்ள ராமநகர் சிறையில் பாதராயனபுரா வன்முறையாளர்களை அடைத்தது ஏன்? - குமாரசாமி கேள்வி
x
தினத்தந்தி 25 April 2020 5:37 AM IST (Updated: 25 April 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

பசுமை மண்டலத்தில் உள்ள ராமநகர் சிறையில் பாதராயனபுரா வன்முறையாளர்களை அடைத்தது ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூரு பாதராயனபுராவில் கடந்த 19-ந்தேதி வன்முறை ஏற்பட்டது. கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்த சென்ற போலீசார் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது அந்த பகுதியினர் தாக்குதல் நடத்தினர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர்.

இது தொடர்பாக 121 பேரை போலீசார் கைது செய்து, ராமநகர் சிறையில் அடைத்தனர். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கொரோனா அறிகுறி உள்ளவர்களை பசுமை மண்டலமான ராமநகர் சிறையில் அடைத்ததை அவர் வன்மையாக கண்டித்தார். இது தொடர்பாக அவர் முதல்-மந்திரி எடியூரப்பா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோருடன் தொலைபேசியில் பேசினார்.

எதிர்ப்பு தெரிவித்தேன்

ஆனால் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டவர்களை வேறு சிறைக்கு அரசு மாற்றவில்லை. இந்த நிலையில் பாதராயனபுரா வன்முறையில் ஈடுபட்டு கைதாகி, ராமநகர் சிறையில் இருப்பவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் ராமநகர் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பாதராயனபுரா வன்முறையில் ஈடுபட்டவர்களை ராமநகர் சிறையில் அடைக்க்ககூடாது என்று நான் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தேன். அந்த பகுதி பசுமை மண்டலமாக உள்ளது. இப்போது அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பசுமை மண்டலம் என்று தெரிந்திருந்தும், அங்கு இந்த வன்முறையாளர்களை அடைத்தது தவறு.

பெங்களூருவுக்கு மாற்ற வேண்டும்

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, தற்போது சிறைத்துறை டி.ஜி.பி.யாக உள்ள அலோக் மோகன், தன்னை பெங்களூரு நகர கமிஷனராக நியமிக்குமாறு கேட்டார். நான் அவருக்கு அந்த பதவி வழங்கவில்லை. இதனால் என்னை பழிவாங்கும் விதமாக அந்த அதிகாரி ராமநகரில் பாதராயனபுரா வன்முறையாளர்களை ராமநகர் சிறையில் அடைத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

அவர்களை ராமநகர் சிறையில் அடைக்க அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது யார் என்பதை கூற வேண்டும். இப்போது ராமநகர் மக்கள் பீதியடைந்து உள்ளனர். அந்த கைதிகளை உடனடியாக பெங்களூருவுக்கு மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் ராமநகரில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story