மத்திய அரசை கண்டித்து தர்ணா: காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கைது
மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு நிதி வழங்கவில்லை
புதுவையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உதவிட ரூ.995 கோடி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இடைக்காலமாக ரூ.300 கோடி வழங்க வேண்டும் என்றும் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து நிதி எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் புதுவை அரசு தற்போது நிதி சிக்கலில் மாட்டியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்க கோரி கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஊர்வலம்
அதன்படி போராட்டம் நடத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் தனுசு, இளையராஜா, தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் பெருமாள், முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் மிஷன் வீதி மாதா கோவில் அருகே திரண்டனர். அங்கிருந்து போராட்டம் நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி அவர்களை கைது செய்தனர். கைதான அனைவரும் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெவ்வேறு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story