கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2 பேர் வீடு திரும்பினர் பழங்கள் கொடுத்து டீன் வழியனுப்பி வைத்தார்


கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2 பேர் வீடு திரும்பினர் பழங்கள் கொடுத்து டீன் வழியனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 25 April 2020 7:04 AM IST (Updated: 25 April 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2 பேர் வீடு திரும்பினர். பழங்கள் கொடுத்து டீன் சுகந்தி ராஜகுமாரி வழியனுப்பி வைத்தார்.

நாகர்கோவில், 

கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2 பேர் வீடு திரும்பினர். பழங்கள் கொடுத்து டீன் சுகந்தி ராஜகுமாரி வழியனுப்பி வைத்தார்.

16 பேர் சிகிச்சை

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை மற்றும் டென்னிசன் தெருவைச் சேர்ந்தவர்கள் 7 பேரும், தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியைச் சேர்ந்த 3 பேரும், மணிக்கட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.

முதலில் வீடு திரும்பியவர்

அவர்களில் முதன்முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவரான வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்தவருக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தினர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அவர், வீட்டுக்கு செல்ல மறுத்து ஆஸ்பத்திரியிலேயே இருந்து வருகிறார்.

இதைதொடர்ந்து தேங்காப்பட்டணத்தை சேர்ந்த 3 பேரில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார். அவருக்கு பழங்கள் கொடுத்து கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 3 பேருக்கு நீங்கியது

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 14 பேரில் 8 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வீடு திரும்பிய தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்தவரின் 38 வயது மனைவி,

முதன்முதலில் கொரோனாவில் இருந்து குணமடைந்த வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரின் 4 வயது மகன், மணிக்கட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சென்னை விமான நிலைய ஊழியரின் 65 வயது தந்தை என 3 பேர் குணம் அடைந்திருப்பது தெரிய வந்தது. மற்ற 5 பேருக்கும் நோய் நீங்கவில்லை.

2 பேரை வழியனுப்பினர்

அதன்பிறகு குணமடைந்த 3 பேருக்கும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனால் 4 வயது சிறுவனின் தந்தை குணமான பிறகும் ஆஸ்பத்திரியில் இருந்து வருவதாலும், அவனுடைய தாயார் மற்றும் அண்ணன், பாட்டி ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாலும் சிறுவன் ஆஸ்பத்திரியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளான்.

மற்ற 2 பேரும் நேற்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது டீன் சுகந்தி ராஜகுமாரி 2 பேருக்கும் பழங்கள் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இதில் முன்னாள் டீன் ராதாகிருஷ்ணன், ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் விஜயலட்சுமி, ரெனிமோள், டாக்டர் பிரின்ஸ் பயஸ் மற்றும் நர்சுகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர் சிகிச்சையில் 11 பேர்

குணமடைந்த 2 பேரும் ஆம்புலன்ஸ்களில் புறப்பட்டுச் செல்லும்போது டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து அவர்களை வாழ்த்தி வழியனுப்பினர். அவர்களும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் 2 பேரையும் அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனித்திருக்குமாறு டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேரில் 5 பேர் குணமடைந்துள்ளனர். எனவே தொடர் சிகிச்சையில் இன்னும் 11 பேர் இருந்து வருகிறார்கள். அவர்களும் விரைவில் குணமடைவார்கள் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story