திருச்சி பெரிய கடைவீதிக்கு செல்லும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் முகவரிக்கான அடையாள அட்டையை சரிபார்த்த பின் போலீசார் அனுமதி
ஊரடங்கின்போது திருவிழாபோல தினமும் கூட்டம் கூடியதால் திருச்சி பெரியகடை வீதிக்கு செல்லும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
திருச்சி,
ஊரடங்கின்போது திருவிழாபோல தினமும் கூட்டம் கூடியதால் திருச்சி பெரியகடை வீதிக்கு செல்லும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முகவரிக்கான அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே போலீசார் அனுமதி அளித்தனர்.
தினமும் திருவிழா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை அத்தியாவசிய தேவைகளான காய்கறி உள்ளிட்ட மளிகை சாமான்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டு விட்டாலும், அதை சுற்றியுள்ள வெல்லமண்டி பகுதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த வியாபார மளிகைக்கடைகள், அரிசிக்கடைகள், ஆயில் கடைகள் உள்ளிட்டவைகளில் சரக்கு வாங்க தினமும் சாலைகளில் நாலாபுறங்களில் இருந்தும் இருசக்கர வாகனங்கள், மினி சரக்கு வேன்கள், ஆட்டோக்கள், கார்கள் என சாரை, சாரையாக வந்து கொண்டேதான் இருக்கின்றன.
ஊரடங்கு வேளையில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அங்கு தினமும் திருவிழா கூட்டம்போல காணப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதுதொடர்பாக நேற்றைய ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் பெரிய கடை வீதிகளில் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வோருக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
அதாவது பெரிய கடைவீதி நுழைவு வாயில் ஆர்ச் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து அங்கு போலீஸ் உதவி கமிஷனர் சின்னராசு தலைமையில் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே, மாவட்ட நிர்வாகம் அறிவித்ததுபோல வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் இருந்துதான் வருகிறார்களா? என்பதை அறிய முகவரிக்கான ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது.
திரும்ப அனுப்பினர்
முகவரிச்சான்று சரிபார்க்கப்பட்ட பின்னரே பெரிய கடை வீதிக்குள் அனுமதிக்கப்பட்டனர். முகவரிக்கான அடையாள சான்று இல்லாதவர்களை போலீசார் திரும்ப அனுப்பினர். இதனால், நேற்று காந்தி மார்க்கெட், பெரியகடை வீதியில் பெரிய அளவில் கூட்டம் இல்லை. மேலும் மளிகைக்கடை உள்ளிட்ட இதர கடைகள் முன்பு சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் போலீசார் 1 மீட்டர் இடைவெளி விட்டு சாக்பீஸ் மூலம் வட்டம் போட்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story