விவசாயத்திற்கு 6 மணி நேரமே மும்முனை மின்சாரம் வினியோகம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய ஆழ்துளை மோட்டார்கள் இயங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய ஆழ்துளை மோட்டார்கள் இயங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ஆழ்துளை கிணறுகள்
தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் குடிதண்ணீரும் ஆழ்துளை கிணறுகள் மூலமே எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பல தாலுகாவில் ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், குளமங்கலம், மறமடக்கி, வடகாடு உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் ரூ.15 லட்சம் வரை செலவு செய்து ஆயிரம் அடிகள் வரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
மின்சாரம் பற்றாக்குறை
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக புதுக்கோட்டை மாவட்டம், முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் குடி நீருக்கும், விவசாயத்திற்கும் அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க மும்முனை மின்சாரம் தேவையாக உள்ளது. கடந்த ஒரு மாதமாக பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மட்டுமே மும்முனை மின்சாரம் கொடுக்கப்படுவதால் விவசாயிகள் விளை நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் தண்ணீர் வழங்க குறைந்த அளவு மின்சாரம் வருவதால் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்க முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் தவித்து வருகிறது.
20 மணி நேரம்
இதுகுறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆலங்குடி தொகுதி போன்று காவிரி பாசனப் பகுதிகளில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க அரசாணை இருந்தும் கூட 6 மணி நேரம் கூட முழுமையாக மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. அதனால் ஒட்டு மொத்த விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலுக்கு வந்த சில நாட்கள் முழுமையாக மும்முனை மின்சாரம் கிடைத்தது. அதன் பிறகு தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்பதால் மின் உற்பத்தியை குறைத்துவிட்டு விவசாயத்திற்கான மின் வினியோகமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. அதிலும் பல நாட்கள் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் குடி தண்ணீருக்கே வழியில்லை என்கின்றனர்.
Related Tags :
Next Story