ஊரடங்கால் கரும்பு விவசாயிகள் கடும் பாதிப்பு கூலி ஆட்கள் கிடைக்காததால் கவலை
திருமானூர் பகுதியில் கொரோனா ஊரடங்கால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூலி ஆட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கீழப்பழுவூர்,
திருமானூர் பகுதியில் கொரோனா ஊரடங்கால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூலி ஆட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கரும்பு விவசாயிகள்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியான திருமானூர் ஒன்றியம் அதிகமாக கரும்பு மற்றும் நெல் விவசாயம் செய்யும் பகுதியாகும். தற்போது கரும்புகள் அறுவடை செய்ய தயாராக உள்ள நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு இருப்பதால் கரும்பு விவசாயிகள் கரும்பு வெட்டுவதற்கு வேலை ஆட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவது, உரம் இடுவது போன்ற விவசாய வேலைகள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், விவசாய கூலி தொழிலாளிகள் கொரோனா பரவி வரும் நேரத்தில் எதற்காக வேலைக்கு சென்று கொண்டு என வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் கரும்பு விவசாயிகள் பலரும் உள்ளூரில் ஆட்கள் கிடைக்காமல் வெளி மாவட்டங்களில் இருக்கும் கரும்பு வெட்டும் தொழிலாளிகளை ஆயிரக்கணக்கில் செலவு செய்து கையோடு அழைத்து வந்து வேலை வாங்கி வருகின்றனர்.
வெளி மாவட்டங்களில்...
இதுகுறித்து கரும்பு விவசாயிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கால் கூலி ஆட்கள் யாரும் வேலைக்கு வர மறுக்கின்றனர். பயிரிடப்பட்ட கரும்புகள் அறுவடை நேரத்தை தாண்டி சென்று கொண்டிருப்பதால் வேறுவழியின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை கொண்டுவர 4 அல்லது 5 நாட்கள் அலைந்து மாவட்ட கலெக்டரிடம் அனுமதி வாங்கி, அதன்பின் வெளி மாவட்டங்களில் தங்கி அங்கு ஆட்களை திரட்டி அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை கையோடு அழைத்து வந்து கரும்புகளை வெட்ட வைப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடுகிறது. கொரோனா ஊரடங்கு இல்லாத நாட்களில் உள்ளூரில் ஆட்கள் கிடைக்காவிட்டாலும், வெளி மாவட்டத்தில் இருக்கும் ஆட்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாலே போதும் மறுநாள் பஸ் பிடித்து வேலைக்கு வந்து விடுவார்கள்.
கவலையோடு எதிர்பார்ப்பு
ஆனால் தற்போது அனைவருமே வெளியே வர யோசிப்பதால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்து, வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை கொண்டுவர வேண்டியுள்ளது.
கரும்பு வெட்ட தொடங்குவதற்கான இந்த செயல்பாடுகளுக்கே 10 நாட்களுக்கு மேல் ஆகிவிடும். இதனாலயே பல கரும்பு விவசாயிகள் முதல் போனாலும் பரவாயில்லை என கரும்புகளை வெட்டாமல் அப்படியே விட்டு வைத்துள்ளனர். இதனால் எப்போது தான் கொரோனா ஊரடங்கு முடியுமோ என கரும்பு விவசாயிகள் கவலையோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story