செங்கோட்டை பகுதியில் மர அறுவை ஆலைகள் மூடல்: ரூ. 300 கோடி மரத்தடிகள் தேக்கம் - வறுமையில் வாடும் தொழிலாளர்கள்


செங்கோட்டை பகுதியில் மர அறுவை ஆலைகள் மூடல்: ரூ. 300 கோடி மரத்தடிகள் தேக்கம் - வறுமையில் வாடும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 26 April 2020 4:00 AM IST (Updated: 26 April 2020 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் செங்கோட்டை பகுதியில் மர அறுவை ஆலைகள் மூடப்பட்டன. இதனால் அங்கு ரூ.300 கோடி மதிப்பிலான மரத்தடிகள் தேக்கம் அடைந்து உள்ளன.

செங்கோட்டை, 

மரம் நடுவோம், மழை பெறுவோம். மரம் மனிதனுக்கு கிடைத்த மகத்தான வரம், உயிரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று மரங்களின் முக்கியத்துவத்தை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் சுவாசிப்பதற்கு மூச்சுக்காற்றை தரும் மரங்கள் தன்னையே வீடாகவும், விறகாகவும் தந்து உதவுகிறது.

மனிதர்களின் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, மரங்களின் தேவைப்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, பிரானூர், இலஞ்சி, தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கு மேற்பட்ட மர அறுவை ஆலைகள் உள்ளன. இங்கு பர்மா, மலேசியா, கனடா, இந்தோனேஷியா, தென் அமெரிக்கா, தான்சானியா, கேமரூன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேக்கு, கோங்கு, படாக் உள்ளிட்ட பல்வேறு வகையான மரத்தடிகளை இறக்குமதி செய்கின்றனர். வெளிநாடுகளில் கொள்முதல் செய்யப்படும் மரத்தடிகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்புகின்றனர். அதனை அங்கிருந்து லாரிகளில் மர அறுவை ஆலைகளுக்கு எடுத்து வருகின்றனர்.

பின்னர் மர அறுவை ஆலைகளில் நவீன எந்திரங்களின் மூலம் மரத்தடிகளை தரம், அளவு வாரியாக துல்லியமாக சிறிய கட்டைகளாக அறுக்கின்றனர். பின்னர் அவற்றை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரக்கடைகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். மரக்கடைகளில் உள்ள தச்சு தொழிலாளர்கள் மரக்கட்டைகளை எந்திரங்களின் மூலம் இழைத்து கதவு, ஜன்னல், மேஜை, நாற்காலி, கட்டில் போன்ற பல்வேறு பொருட்களாக வடிவமைக்கின்றனர். இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 15 ஆயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.


இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து மர அறுவை ஆலைகளும், மரக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்ட மரத்தடிகள் தேக்கம் அடைந்துள்ளன. அவைகள் வெயிலிலும், மழையிலும் நாட்கணக்கில் கிடந்து வீணாகி வருகின்றன.

மேலும் மர அறுவை ஆலைகளில் அறுக்கப்பட்ட மரக்கட்டைகளையும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. மர அறுவை ஆலைகள், மரக்கடைகளில் பணியாற்றிய தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர்.

ரூ.300 கோடி மரத்தடிகள் தேக்கம்

இதுகுறித்து மர அறுவை ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:-

வெளிநாடுகளில் இருந்து மரத்தடிகளை கொள்முதல் செய்து, அதனை பல்வேறு அளவுகளில் மரக்கட்டைகளாக அறுத்து ஏற்றுமதி செய்து வந்தோம். இதற்காக வங்கிகளில் கடன் பெற்று தொழிலை நடத்தி வந்தோம். எங்களிடம் இருந்து மரக்கட்டைகளை மரக்கடைக்காரர்கள் கடனுக்கே கொள்முதல் செய்வார்கள். அதற்குரிய பணத்தை ஒரு மாதத்துக்குள்ளாக திருப்பி தந்த பின்னர் மீண்டும் கொள்முதல் செய்வார்கள்.

தற்போது ஊரடங்கு காரணமாக, செங்கோட்டை பகுதியில் ரூ.300 கோடி மதிப்பிலான மரத்தடிகள் தேக்கம் அடைந்துள்ளன. மர அறுவை ஆலை உரிமையாளர்கள், வங்கியில் பெற்ற கடனுக்கு தவணையை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. எனினும் வெளிநாடுகளில் இருந்து டாலர் மதிப்பிலேயே மரத்தடிகளை கொள்முதல் செய்வதாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே செல்வதாலும் கடன் சுமை அதிகரித்தவாறு உள்ளது.

மேலும் எங்களிடம் கடனுக்கு மரக்கட்டைகளை கொள்முதல் செய்த மரக்கடைக்காரர்களும் பணத்தை திருப்பி தர முடியாத நிலையில் உள்ளனர். எனவே, வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணையை திருப்பி செலுத்தும்போது, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மர அறுவை ஆலை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மர அறுவை ஆலைகள், மரக்கடைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள், தச்சு தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story