குன்றத்தூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தொழிலாளி பலி


குன்றத்தூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 26 April 2020 4:15 AM IST (Updated: 26 April 2020 3:49 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வாலிபர் பலியானார். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த 36 வயதான வெல்டிங் தொழிலாளி, கடந்த சில தினங்களாக சளி மற்றும் காய்ச்சல், உடல் வலியால் அவதிப்பட்டார். இதற்காக குன்றத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றார்.

அங்கிருந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு மிகுந்த மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

இந்தநிலையில் அவரது ரத்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனாலேயே அவர் உயிரிழந்ததும் தெரிந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது? என்பது தெரியவில்லை.

இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அத்துடன் அவரது வீடு அமைந்துள்ள பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலியான தொழிலாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு...

குன்றத்தூரை சேர்ந்த 37 வயதுடைய ஒருவர், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி பெரிய ஓட்டல்களுக்கு வினியோகம் செய்து வந்தார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடைய மனைவி, பிள்ளைகள், தாய், சகோதரர் உள்பட 6 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது. அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 27 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால் அவர்களது வீட்டை சுற்றிலும் 5 கி.மீ. சுற்றளவுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தெருக்கள் சீல் வைக்கப்பட்டது.

அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து வெளியாட்கள் யாரும் உள்ளே வரமுடியாமலும், யாரும் வெளியே செல்லாமல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், குன்றத்தூர், மாங்காடு பேரூராட்சிகள், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாகனங்களில் அரசு சார்பில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும்.

முஸ்லிம்களின் நோன்பு மாதம் என்பதால் அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் அவர்கள் தங்கி உள்ள இடத்துக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

Next Story