தேக்கம் அடைந்துள்ள தரைதள செங்கல், பூந்தொட்டிகள் சிமெண்டு, ஜல்லி எடுத்துவர முடியாததால் உற்பத்தி பாதிப்பு
ஊரடங்கால் தரைதள செங்கல், பூந்தொட்டிகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் சிமெண்டு, ஜல்லி எடுத்துவர முடியாததால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
ஊரடங்கால் தரைதள செங்கல், பூந்தொட்டிகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் சிமெண்டு, ஜல்லி எடுத்துவர முடியாததால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக மளிகை, காய்கறி, மருந்து பொருட்கள் மட்டும் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் குடும்பத்தில் ஒருவர், வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதையும் மீறி செல்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
தொழில்கள் பாதிப்பு
ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. குறிப்பாக கட்டிட தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் சூளைகளில் தயாரிக்கப்பட்ட செங்கல்கள் தேக்கம் அடைந்து காணப்படுகின்றன. இதேபோல் தரை தளத்தில் பதிக்கும் செங்கல் (பேவர் பிளாக்) தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த செங்கல் தேக்கம் அடைந்துள்ளன.
தஞ்சையில் மட்டும் 6 இடங்களில் இந்த தரைதள செங்கல் தயாரிக்கும் இடம் உள்ளது. இங்கு 4 விதமாக செங்கல்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த செங்கல்கள் 1 சதுர அடி ரூ.42-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தயாரிப்பவர்களே அதனை எடுத்து வந்து தரையில் பதித்துக்கொடுப்பதற்கு செங்கல் விலையையும் சேர்த்து சதுர அடிக்கு ரூ.52 வசூல் செய்கிறார்கள்.
3 லட்சம் செங்கல்கள் தேக்கம்
ஊரடங்கு காரணமாக இந்த தரைதள செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, தயாரிக்கப்பட்ட செங்கல்களும் அப்படியே தேக்கம் அடைந்து காணப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இது போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. இந்த நிறுவனங்களில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செங்கல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
மேலும் கட்டுமான பணிகள் நடைபெறாததால் யாரும் வந்து இதனை வாங்குவதும் இல்லை. மேலும் அவ்வாறு வாங்கினாலும் அதை எடுத்துச்செல்வதிலும் பெரும் சிரமம் நிலவி வருகிறது. இதேபோல் பூச்செடிகள் வைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வண்ண பூந்தொட்டிகள், வட்ட வடிவிலான தொட்டிகள் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுவும் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கிறது.
எடுத்துச்செல்வதில் சிரமம்
இது குறித்து தரைதள செங்கல்கள் தயாரிப்பாளரான ரத்தனகுமார் கூறுகையில், “ஊரடங்கினால் எங்களது தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தயாரித்த செங்கல்களும் அப்படியே தேங்கிக்கிடக்கிறது. கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்தாலும் இதனை கொண்டு செல்வதில் சிரமம் இருக்கிறது. எனவே வாகனங்களையும் இயக்க அனுமதிக்கும் போதுதான் இதனை எளிதில் எடுத்துச்சென்று பணிகளை மேற்கொள்ள முடியும்.
இதேபோல் செங்கல்கள் உற்பத்தி செய்வதற்கான பொருட்களையும் எடுத்து வருவதில் பல்வேறு சிரமங்கள் நிலவி வருகிறது. இந்த செங்கல்கள் தயாரிக்க சிமெண்டு, ஜல்லி, கிரஷர் மண், மணல் ஆகியவை தேவைப்படுகிறது. தற்போது சிமெண்டு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதை எடுத்துவர முடியவில்லை. இதேபோன்றுதான் ஜல்லி, மணல் ஆகியவற்றையும் கொண்டு வர முடியவில்லை. இதனால் உற்பத்தி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.
Related Tags :
Next Story