கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தொழிலாளி பலி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் பாதிப்பு


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தொழிலாளி பலி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் பாதிப்பு
x
தினத்தந்தி 26 April 2020 4:30 AM IST (Updated: 26 April 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தொழிலாளி பலியானார். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த 36 வயதான வெல்டிங் தொழிலாளி, கடந்த சில தினங்களாக சளி மற்றும் காய்ச்சல், உடல் வலியால் அவதிப்பட்டார். இதற்காக குன்றத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றார்.

அங்கிருந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு மிகுந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இந்தநிலையில் அவரது ரத்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனாலேயே அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது.

குன்றத்தூரில் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 37 வயது நபரின் மனைவி, தாய் உள்ளிட்ட குடும்பத்தினர் 6 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் சென்னையை சேர்ந்த 13 மாணவர்கள், அந்த மாநில அரசின் அனுமதி மற்றும் உரிய மருத்துவ சான்றுடன் ஒரு தனியார் பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடி பகுதியில் நேற்று வந்தபோது பஸ்சை சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, ரத்த மாதிரிகள் சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் முடிவுகள் வரும் வரை மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் விடுதிக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்த மாணவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலைபார்த்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு கடந்த வாரம் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. இதனால் அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆவடி காமராஜர் நகரில் 43 வயது பெண் மருந்தாளுனருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story