நோய் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் உற்சாகத்துடன் பணியாற்றுவோம் டி.ஐ.ஜி. பேட்டி
நோய் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் உற்சாகத்துடன் பணியாற்றுவோம் என டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.
கும்பகோணம்,
நோய் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் உற்சாகத்துடன் பணியாற்றுவோம் என டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.
பாதுகாப்பு பணி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளை சுற்றி 27 இடங்களில் போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகள் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசாருக்கு பிஸ்கட், குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு, போலீசார் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள், அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து டி.ஐ.ஜி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரைபடங்கள்
கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக ஆங்காங்கே வரைபடங்களுடன் கூடிய தட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கண்காணிப்பில் உள்ள பகுதிகள் பற்றிய விவரங்கள், தடை செய்யப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
கொரோனா வைரஸ் என்பது கொடிய நோய். இந்த நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. இதை அனைவரும் அறிந்துள்ளனர். பாராட்டுகிறார்கள். போலீசாரின் நோய் தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் மேலும் உற்சாகத்துடன் பணியாற்றுவோம்.
உயிர் பிரச்சினை
இது உயிர் பிரச்சினை. பொதுமக்களின் உயிரை காக்க போலீசார் தங்களது உயிரை துச்சமென நினைத்து பணியாற்றுகிறார்கள். எனவே ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, ரமேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அய்யம்பேட்டை
அதேபோல் அய்யம்பேட்டை பகுதியில் போலீசாரின் பாதுகாப்பு பணிகள் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினார். மேலும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல், போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது போலீசாரிடம் டி.ஐ.ஜி. கூறியதாவது:- பறிமுதல் செய்யும் வாகனங்களை தேதி வாரியாக நிறுத்தி வைக்க வேண்டும். சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்லப்படுகிறார்களா? என முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். போலீசார் கட்டாயமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து குளிர் பானம், பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை போலீசாருக்கு, டி.ஐ.ஜி. வழங்கினார். அப்போது பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்ராஜ், காசிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாபநாசம்
பாபநாசம் பேரூராட்சியில் திருப்பாலைத்துறை பகுதியில் கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடைசெய்யப்பட்ட பகுதியை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தவச்செல்வன், பாபநாசம் தாசில்தார் கண்ணன், இன்ஸ்பெக்டர் துர்கா, வருவாய் ஆய்வாளர்கள் ராஜ்குமார், மஞ்சுளா, கிராம நிர்வாக அலுவலர் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பாபநாசம் திருப்பாலைத்துறை, சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவலர்களுக்கும், தன்னார்வ பணியாளர்களுக்கும் ஊர் காவல் படையினருக்கும், போலீஸ் நண்பர்களுக்கும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பிஸ்கட், குடிநீர் ஆகியவற்றையும் வழங்கினார்.
Related Tags :
Next Story