கோட்டூர் அருகே வாய்க்காலில் 600 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
கோட்டூர் அருகே வாய்க்காலில் 600 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
கோட்டூர்,
கோட்டூர் அருகே வாய்க்காலில் 600 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
வாய்க்காலில் மண் தோண்டினர்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள குலமாணிக்கம் ஊராட்சி நருவளிகளப்பால் மேலத்தெருவில் 4 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பின்னால் நருவளிகளப்பால் பாசன வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்காலில் அதே தெருவை சேர்ந்த பசுபதி (வயது42), அவருடைய நண்பர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று வாழை தோட்டத்துக்கு தேவையான மண்ணை தோண்டி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலை தோண்டியபோது மண்ணுக்கு அடியில் மண் பாண்ட பொருள் தென்பட்டது. அது பழங்காலத்தில் நெல் போட்டு வைப்பதற்கு பயன்பட்ட சிறிய அளவிலான குதிர் போன்று தோற்றம் அளித்தது.
முதுமக்கள் தாழி
இதுகுறித்து ரவிச்சந்திரன், மன்னார்குடி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் தாசில்தார் கார்த்தி, களப்பால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த தொழிலாளர்கள் மூலம் மண் பாண்ட பொருள் இருந்த பகுதியை கவனமாக தோண்டினர்.
அப்போது வாய்க்காலில் மண்ணுக்கு அடியில் இருந்தது முதுமக்கள் தாழி என்பது தெரியவந்தது. சிதிலம் அடைந்த நிலையில் இருந்த அந்த முதுமக்கள் தாழியின் மூடியை அகற்றி அதற்குள் இருந்த மண்டை ஓடு துகள்கள், எலும்பு துண்டுகள், இரும்பு குண்டுகளை பத்திரமாக வெளியே எடுத்தனர். இதையடுத்து அந்த முதுமக்கள் தாழியை சுற்றி இருந்த மண்ணுடன் சேர்த்து பத்திரமாக வெளியே எடுக்க முயற்சித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தாழி துண்டு, துண்டுகளாக உடைந்து போனது.
பத்திரமாக சேகரித்தனர்
இதையடுத்து தாழியின் உடைந்த பாகங்களை அதிகாரிகள் சேகரித்து சுத்தம் செய்தனர். பின்னர் அவற்றையும், அதில் இருந்த எலும்பு துண்டுகள், இரும்பு குண்டுகளையும் தாசில்தார் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த முதுமக்கள் தாழி 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொல்லியல் துறை மூலமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த முதியவர்கள் கூறியதாவது:- 600 ஆண்டுகளுக்கு முன்பு 125 வயதுக்கு மேற்பட்டவர்களை உயிரோடு குதிர் வடிவத்திலான மண் பாண்டத்துக்குள் வைத்து, அவர்கள் ஆசைப்பட்ட பொருட்களுடன் புதைத்து விடுவது வழக்கமாக இருந்தது. இதை முதுமக்கள் தாழி என அழைப்பார்கள். தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருளும், முதுமக்கள் தாழி போன்று தான் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story