அரகண்டநல்லூரில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


அரகண்டநல்லூரில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 25 April 2020 10:45 PM GMT (Updated: 26 April 2020 12:19 AM GMT)

கொரோனா பாதித்த அரகண்டநல்லூரில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்னுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அங்கு தற்போது அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அரகண்டநல்லூரில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ.வின் சொந்த செலவில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் விழிச்செல்வன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பயனாளிகள், துாய்மைபணியாளர்கள் உள்பட மொத்தம் 1800 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார். இதனை தொடர்ந்து ஸ்ரீலட்சுமிவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துாய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் மதிய உணவு வழங்கினர்.

அதோடு கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு ஊரடங்கு காலம் முடியும் வரை உணவு அளிப்பதற்கான செலவு தொகையும் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பழனிச்சாமி, ஏ.பி.பழனி, நகர செயலாளர் கே.சுப்பு, முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எம்.இளங்கோவன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அரகண்டநல்லூர் ராஜ்குமார், கண்டாச்சிபுரம் தனபால்ராஜ், முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.தமிழரசன், அ.தி.மு.க வக்கீல் அணி நிர்வாகி கே.உமாசங்கர், நாதன்காடுவெட்டி ஆர்.சுபாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story