திருவெண்ணெய்நல்லூர் அருகே, மின்வேலியில் சிக்கி விவசாயி பலி - 2 பேர் கைது


திருவெண்ணெய்நல்லூர் அருகே, மின்வேலியில் சிக்கி விவசாயி பலி - 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2020 3:30 AM IST (Updated: 26 April 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 50), விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் வாழை சாகுபடி செய்ததோடு, வாழை பயிரை காட்டுப்பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற வயலை சுற்றிலும் மலையரசன்குப்பம், மழவந்தாங்கலை சேர்ந்த 2 பேர் உதவியுடன் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை திருநாவுக்கரசு தன்னுடைய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றிருந்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருநாவுக்கரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து திருநாவுக்கரசுவின் மகன் புகழேந்தி கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்திருந்தும் மலையரசன்குப்பத்தை சேர்ந்த செல்வம் (42), மழவந்தாங்கலை சேர்ந்த அய்யப்பன் (33) ஆகியோர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story