கடந்த ஒரு மாதத்தில் ஊரடங்கை மீறிய 6 ஆயிரம் பேர் கைது


கடந்த ஒரு மாதத்தில் ஊரடங்கை மீறிய 6 ஆயிரம் பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2020 3:30 AM IST (Updated: 26 April 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஊரடங்கை மீறிய 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஊரடங்கை மீறி சாலைகளில் தேவையில்லாமல் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ சுற்றித்திரிபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்யும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் உள்ள மார்க்கெட் பகுதிகள், கடைவீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் நின்றுகொண்டு, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், ஒருமுறை வீட்டை விட்டு வெளியே கடைகளுக்கு வந்தால் 4, 5 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கிச்செல்லும்படியும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதாக பொய் சொல்லிக்கொண்டு தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிய வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவுரை கூறி வருகின்றனர். இருப்பினும் இதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். அவ்வாறு ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் கைது செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நேற்று வரை கடந்த ஒரு மாதத்தில் 5,850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 6 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 75 கார்கள், 85 ஆட்டோக்கள், 4,420 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 4,580 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story