நெல்லையில் தடையை மீறி இயங்கிய சூப்பர் மார்க்கெட், இறைச்சி கடைக்கு ‘சீல்’ வைப்பு
நெல்லையில் தடையை மீறி இயங்கிய சூப்பர் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லையில் தடையை மீறி இயங்கிய சூப்பர் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
சமூக இடைவெளி
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் சமூக இடைவெளி ஏற்படுத்தி, கொரோனா பரவல் சங்கிலி தொடரை துண்டிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக மளிகை, காய்கறி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
‘சீல்‘ வைப்பு
இந்த தடையை மீறி செயல்படும் கடைகள் மூடி ‘சீல்‘ வைக்கப்படுகிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நேற்று பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி உள்ளனர். இதைக்கண்ட மாநகராட்சி அதிகாரிகள் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்று கூறி, அந்த சூப்பர் மார்க்கெட்டை பூட்டி ‘சீல்‘ வைத்தனர். இதேபோல் அந்த பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட மேலும் 2 கடைகளையும் அதிகாரிகள் பூட்டினர்.
இறைச்சி கடை
நெல்லை மாநகரில் 3 இடங்களில் மட்டுமே இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பாளையங்கோட்டை பெல் மைதானம், டவுன் ஆர்ச், கண்டியப்பேரி உழவர் சந்தை ஆகிய 3 இடங்களில் அனைத்து இறைச்சி வியாபாரிகளும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்ற இடங்களில் உள்ள கடைகளில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் ஏற்கனவே உள்ள இறைச்சி கடையில் நேற்று தடையை மீறி இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதைக்கண்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடையை பூட்டி ‘சீல்‘ வைத்தனர்.
Related Tags :
Next Story