கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெயில் பெட்டிகள் தயார்; ஆனால், நோயாளிகள் இல்லை
திருச்சியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வடிவமைக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் தயாராக இருந்தாலும் நோயாளிகள் இல்லை என்பதால் அவை தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
திருச்சி,
திருச்சியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வடிவமைக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் தயாராக இருந்தாலும் நோயாளிகள் இல்லை என்பதால் அவை தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
500 ரெயில் பெட்டிகள்
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 500 ரெயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணியினை தெற்கு ரெயில்வே தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை தற்காலிகமாக மூடப்பட்டு விட்டது. அங்கு பழைய ரெயில் பெட்டிகள் பராமரிப்பது, புதிய பயணிகள் ரெயில் பெட்டிகளை நவீன முறையில் வடிவமைப்பது, சரக்கு ரெயில்களில் இணைக்கப்படும் வேகன்களை தயாரிப்பது, டீசல் என்ஜின்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் பணிமனை மூடப்பட்டு விட்டாலும் இந்திய ரெயில்வே வாரியம் கேட்டுக்கொண்டதன்பேரில், பொன்மலை ரெயில்வே பணிமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான கட்டில்கள் தயாரிக்கும் பணி நடந்தது. 60 கட்டில்கள் தயாரிக்கப்பட்டன.
144 பெட்டிகள்
மேலும் பொன்மலை பணிமனையில் குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்களை கொண்டு ஏற்கனவே பராமரிப்புக்கு வந்த 110 ரெயில் பெட்டிகள், கொரோனா தொற்று நோயாளிகளுக்கு தனி வார்டுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
இதுதவிர திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ள யார்டு பராமரிப்பு மையத்தில் 2 ரெயில்களில் உள்ள 34 பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனிவார்டுகளாக மாற்றும் பணி நடந்து வந்தது.
ரெயில் பெட்டிகளில் உள்ள மிடில் கிளாஸ் இருக்கைகள் அகற்றப்பட்டன. ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் வகையில் திரைச்சீலை அமைக்கப்பட்டன. மேலும் ரெயில் பெட்டிகளில் உள்ள கழிவறையுடன் கூடிய குளியலறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டிகளின் பக்கவாட்டு ஜன்னல்களில் கொசுவலைகள் அடிக்கப்பட்டுள்ளன.
நோயாளிகள் இல்லை
கொரோனா தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதி இல்லை என்ற நிலையில் ரெயில் பெட்டிகளை வார்டுகளாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், மேலும் ஆஸ்பத்திரி இல்லாத கிராமங்களில் கொரோனா பாதிப்பு இருந்தால் அக்கிராமத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையத்திற்கு தனிவார்டாக வடிவமைக்கப்பட்ட ரெயில் பெட்டி கொண்டு செல்லப்படும் என்றும், அங்கு நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்து இருந்தது.
திருச்சி ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட திருச்சி ஜங்ஷன், திருச்சி பொன்மலை பணிமனை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் ரெயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு தற்போது தயார் நிலையில் ரெயில் நிலைய தண்டவாளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நோயாளிகள் பெரும்பாலும் அரசு ஆஸ்பத்திரிகளிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பிய வண்ணம் உள்ளனர். தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்தபடியே உள்ளது. எனவே, நல்ல நோக்கத்திற்காக ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தாலும் அங்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் நிலைக்கு நோயாளிகள் இல்லை என்பதால் தண்டவாளத்தில் நோயாளிகள் இன்றி வெறுமனே நின்று கொண்டிருக்கிறது. திருச்சி பொன்மலை ரெயில் நிலையத்தில் 3 ரெயில்கள் கொரோனா சிகிச்சைக்காக தயாராக உள்ளன.
Related Tags :
Next Story