ராணிப்பேட்டையில் கடைகளில் விற்பனை கிடையாது: மளிகைப் பொருட்கள் வீடு வீடாக சென்று வினியோகம்
ராணிப்பேட்டையில் கடைகளில் விற்பனை கிடையாது, மளிகைப் பொருட்கள் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யும் முறை இன்று முதல் அமலுக்கு வருவதாக உதவி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை நகரம் இதுவரை கொரோனா தொற்று ஏற்படாத நகரமாக உள்ளது. இருப்பினும், காலை நேரத்தில் மக்கள் கடைகளில் அதிகமாகக் கூடுகின்றனர். அதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து மளிகைக் கடைக்காரர்களையும் வீடு வீடாகச் சென்று வினியோகம் செய்யும் முறைக்கு (ஹோம் டெலிவரி) மாறும் மாறு ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள மளிகைக்கடைகாரர்களை அழைத்து நேற்று ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் ஆலோசனை நடத்தினார். அப்போது வீடு வீடாகச் சென்று மளிகைப் பொருட்களை வினியோகம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
பின்னர், ‘டெலிவர்மீ’ செல்போன் செயலியைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு மளிகைப்பொருள்களை வினியோகம் செய்வது குறித்து செய்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. இந்தச் செல்போன் செயலி மூலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மளிகைப் பொருட்கள் வீடு வீடாகச் சென்று வினியோகம் செய்யப்படும். இனி, கடைகளில் நேரடி விற்பனை கிடையாது. பொதுமக்கள் அதைப் பயன்படுத்தி இன்று முதல் வீட்டில் இருந்து வெளியில் வராமல் மளிகைப் பொருள்களை வாங்கி, தங்களை கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என உதவி கலெக்டர் இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story