வந்தவாசி அருகே, புகையிலை பொருட்கள் பறிமுதல் - வேனில் கொண்டு வந்து வீசியவர் கைது
வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வேனில் கொண்டு வந்து வீசியவரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி,
வந்தவாசியை அடுத்த இந்திரா நகர் அருகில் சாலையோரம் நேற்று 5 மூட்டைகள் கிடந்தன. இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கராமன், இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஏட்டு தேவகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று 5 மூட்டைகளை கைப்பற்றினர். மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
இதைத்தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வேனில் வந்த நபர் புகையிலை பொருட்களை வீசி சென்றது தெரிந்தது. இதையடுத்து வேனின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்தபோது வந்தவாசி தாலுகா பென்னாட்டகரம் கிராமத்தை சேர்ந்த பாலமுரளிகிருஷ்ணன் என்பவர் புகையிலை பொருட்களை வீசி சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் வந்தவாசியில் உள்ள 5 கண்பாலம் அருகில் தெற்கு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேனில் வந்த பாலமுரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story