ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மே மாதம் 2, 3-ந் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மே மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.
திருச்சி,
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மே மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளதாவது:-
தினமும் 200 பேருக்கு...
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக மே மாத அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி மே மாதம் 4-ந் தேதி முதல் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே, மே மாத அத்தியாவசியப் பொருட் களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 நாட்கள் டோக்கன் வினியோகம்
முன்னதாக, மே மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வீடுகள்தோறும் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும். மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இயங்கும் கடைகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், இதர பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நேரப்படியும் செயல்படும். அத்தியாவசியப் பொருட்கள் மே 4-ந் தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவின்படி அனைத்து பொருட்களும் விலையின்றி வினியோகிக்கப்படும். பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகலை கடைபிடித்து தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த அறிவுரையை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
முதியோர்-மாற்றுத் திறனாளிகள்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களுக்கு தேவையான பாதுகாப்புடன் நேரில் சென்று பொருட்கள் வழங்கப்பட வேண்டும். அதுபோன்றே மிகவும் வயதானவர்கள், நேரில் வந்து பொருட் களை கடைகளில் பெற்றுச்செல்ல இயலாதவர்களுக்கும் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் பெற்றுச்செல்ல முன்னுரிமை அளிக்கப்படும். ரேஷன் கடைகளில் 8-ந் தேதி அன்று மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பணிநாளாக கொண்டு செயல்படும். அதற்கு பதிலாக 22-ந் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story