சீசன் நேரத்தில் ஊரடங்கு: கயிற்றுக்கட்டில் விற்பனை கடும் பாதிப்பு விலக்கு அளிக்க வியாபாரிகள் கோரிக்கை
சீசன் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கயிற்றுக்கட்டில் விற்பனை கடும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
சீசன் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கயிற்றுக்கட்டில் விற்பனை கடும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கயிற்றுக்கட்டில் வியாபாரிகள்
கரூர் மாவட்டத்தில், குடிசை தொழிலாக அப்பளம், முறுக்கு, கடலை மிட்டாய் தயாரித்தல் என பல இருந்தாலும், தாந்தோணி மலைப்பகுதிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் தயாரிக்கப்படும் கயிற்றுக்கட்டில் தயாரிக்கும் தொழில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பகுதியில் குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் கயிற்றுக்கட்டில்கள், இரும்பு குழாய்கள் மூலம் நூல், நாடா கயிறுகளை கொண்டு பின்னப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் கட்டில்கள், கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வியாபாரிகள் வெளியூர்களுக்கோ, வெளி மாவட்டங்களுக்கோ சென்று விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
விதிவிலக்கு அளிக்க வேண்டும்
இதுகுறித்து கட்டில் வியாபாரி ஒருவர் கூறுகையில், எப்போதும் கோடை காலங்களில் கயிற்றுக்கட்டிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இக்கட்டிலில் படுக்கும் போது காற்றோட்டமாக இருப்பதுடன், உடலில் ரத்த ஓட்டத்தை சீர் செய்து, புத்துணர்ச்சியை தூண்டும் என்பதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் கட்டில்கள் கூட இம்மாதங்களில் விற்று தீர்ந்துவிடும். தற்போது ஒரு கட்டிலை ரூ.1,500-க்கு விற்பனை செய்கிறோம். அதன் மூலம் எங்களுக்கு ஒரு கட்டிலுக்கு ரூ.150 வரை லாபம் கிடைக்கும். இதைக்கொண்டே நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் விரும்பி கேட்டாலும் வெளி இடங்களுக்கு கொண்டு சென்று விற்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நிவாரணம் வழங்கி உதவிக்கரம் நீட்ட வேண்டும் அல்லது கட்டில்களை கொண்டு சென்று விற்க விலக்கு அளிக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story