ஊரடங்கால் பாதிப்பு: வாழ்வாதாரத்தை இழந்த தச்சு தொழிலாளர்கள்
ஊரடங்கால் தச்சு தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
புதுக்கோட்டை,
ஊரடங்கால் தச்சு தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தச்சு தொழிலாளர்கள்
கொரோனா வைரஸ் உலகையே புரட்டி போட்டு விட்டது. நாட்டில் ஊரடங்கால் அனைவரது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இதில் தச்சு தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். நாற்காலிகள், மேஜைகள், கதவுகள், ஜன்னல்கள், மரப்பலகை உள்ளிட்ட வேலைகளை செய்யும் தொழிலாளர்களும், அதன் விற்பனையாளர்களும், மரக்கடையினரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் சந்தைபேட்டை மேல வீதியில் மர இழைப்பகம், மரக்கடைகள் வரிசையாக 20-க்கும் மேற்பட்டவை உள்ளன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையில்லாமல் முடங்கி கிடக்கின்றனர். கடையின் உரிமையாளர்கள் ஒரு சிலர் கடையிலேயே தங்கி உள்ளனர்.
சவுக்கு கம்புகள்
தச்சு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில், ‘தினமும் வேலைக்கு சென்றால் கூலியாக ரூ.500 வரை கிடைக்கும். தற்போது எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. மரச்சாமான்கள் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு டெலிவரி செய்ய முடியவில்லை. ஏற்கனவே தயாரித்து வைத்த மரத்திலான ஜன்னல்கள், மரக்கதவுகள் விற்பனையாகாமல் கிடக்கின்றன’ என்றார்.
கடையின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘எங்களது கடையில் இருந்து பொருட்களை யாரும் தூக்கி சென்று விடக்கூடாது என்பதற்காக கடையிலேயே தங்கி உள்ளேன். மர இழைப்பகங்கள், பட்டறைகளில் எந்த வேலையும் நடைபெறவில்லை.
இதேபோல சவுக்கு கம்புகள், மூங்கில் கம்புகள் கட்டுமான பணிக்கு சாரம் கட்டுவதற்காகவும், திருவிழாக்களில் பந்தல் போடுவதற்கும் தினமும் லாரி, லாரியாக செல்லும். தற்போது எந்தவிதமான பணிகளும் நடைபெறாததால் இந்த கம்புகளின் தேவை இல்லாமல் போனது. இதனால் அவை கடைகளின் முன்பு அப்படியே குவிந்து கிடக்கின்றன’ என்றார்.
Related Tags :
Next Story