சந்தைகளுக்கு மக்கள் வருவதை தடுக்க 200 வாகனங்களில் காய்கறிகள் விற்க அனுமதி


சந்தைகளுக்கு மக்கள் வருவதை தடுக்க 200 வாகனங்களில் காய்கறிகள் விற்க அனுமதி
x
தினத்தந்தி 26 April 2020 6:12 AM GMT (Updated: 2020-04-26T11:42:14+05:30)

திண்டுக்கல்லில் மக்கள் சந்தைகளுக்கு வருவதை தடுக்கும் வகையில் 200 வாகனங்களில் காய்கறிகள் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாநகராட்சியில் 28 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனால் திண்டுக்கல் நகர் முழுவதும் 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளிநபர்கள் யாரும் அங்கு செல்வதற்கு அனுமதி இல்லை.

அதேநேரம் அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி தனிமைப்படுத்தப்பட்ட 9 பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் தலா 2 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பிற பகுதிகளை சேர்ந்த மக்களுக்காக 6 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் திறக்கப்பட்டன.

இந்த தற்காலிக சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை செயல்படுகின்றன. ஆனால், மக்கள் காய்கறிகளை மொத்தமாக வாங்காமல் தினமும் வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் காய்கறி சந்தைகளில் தினமும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இது கொரோனா பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்.

எனவே, வியாபாரிகள் காய்கறிகளை வாகனங்களில் கொண்டு சென்று தெருத்தெருவாக விற்பனை செய்வதை அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர். இதற்காக மாநகராட்சி சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் நகரில் இதுவரை 200 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் வாகனங்களில் காய்கறிகளை விற்க விருப்பமுள்ள வியாபாரிகளுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மக்கள் சந்தைக்கு வராமல் வீட்டின் முன்பே காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். இதனால் ஊரடங்கை கடைபிடித்து கொரோனா பரவுவதை தடுக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story