கோவை மாநகராட்சி பகுதியில், முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
கோவை மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) இரவு 9 மணி வரை ஊரடங்குமுழுமையாக அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் மற்றும் பல்வேறு துறைகள் தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள் செயல்படாது. நடமாடும் காய்கறிக்கடைகள் மட்டும் இயங்கும், பெட்ரோல் டீசல் பங்குகள் காலை 8 மணிமுதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள் செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது. இந்த ஊரடங்கு மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும். முழு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவிப்பை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
அத்துடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். பிற பகுதிகளில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு தொடரும். கொரோன வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியே வரவோ, வெளிநபர் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டாது. மருத்துவ அவசரம், மகப்பேறு போன்ற அவசிய தேவைகள் தவிர வேறு எந்த காரணத்திற்கும் வெளியே வரக்கூடாது.
இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்கப்படும். முழு ஊரடங்கு நாட்களில் வெளியூர் செல்வதற்கு அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தர அனுமதியில்லை. அனுமதி கோருபவர்கள் இ-பாஸ் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கை களுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Related Tags :
Next Story