கோவையில் இன்று முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு: அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - காற்றில் பறந்த சமூக இடைவெளி
கோவையில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அத்தியாவசிய பொருட்கள் வாங்க மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. மேலும் சமூக இடைவெளி விட்டு மக்கள் நிற்காததால் போலீசார் லத்தியை சுழற்றி கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
கோவை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிக இடங்களில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) 4 நாட்களுக்கு ஊரடங்கு முழுஅளவில் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அத்தியாவசிய கடைகளான மளிகை, காய்கறி கடைகளும் திறந்திருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 29-ந் தேதி இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் 4 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
கோவையில் உள்ள அனைத்து மளிகைக்கடைகள், காய்கறி கடைகளில் பொருட் கள் வாங்க காலை 7 மணிக்கே மக்கள் குவிந்தனர். ஆனால் சில சூப்பர் மார்க்கெட்டுகள் காலை 8 மணிக்கு திறந்ததால் அதுவரை மக்கள் காத்திருந்து நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். சிறிய கடைகளும் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன.
கோவையில் காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளிலும் காலை முதல் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையில் நின்று பொருட்களை வாங்கினார்கள். கோவையின் அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்த சிலர் வரிசையில் நிற்பதை தவிர்த்து தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கினார்கள். இதனால் கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் விறு, விறுப்புடன் நடந்தது.
மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க கூடிய கூட்டத்தை விட காய்கறி கடைகளில் திருவிழா கூட்டம் போல மக்கள் திரண்டனர். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் காலை 6 மணிக்கே கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி விடாமல் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் களை வாங்கினார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காலையிலேயே காய்கறி கடைகளில் இவ்வளவு கூட்டம் கூடும் என்பதை போலீசார் எதிர்பார்க்கவில்லை. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் காந்திபுரம் பஸ் நிலைய மார்க்கெட்டில் கூடியிருந்தவர்களை விரட்டி சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நிற்க வைத்தனர்.
இருந்தபோதிலும் போலீசார் சொல்வதை சிலர் கேட்காததால் போலீசார் லத்தியை சுழற்றி அவர்களை நிற்க வைத்தனர். பொதுமக்களை சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் இல்லாவிட்டால் வீடுகளுக்கு செல்லுமாறும் போலீசார் விரட்டியடித்தனர். அப்படி நின்ற வரிசை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து காட்டூர் போலீஸ் நிலையம் வரை சுமார் 500 அடி தூரம் வரை நீடித்தது.
இதே போல சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி பஸ் நிலையம், தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் காய்கறிகளின் விலையை வியாபாரிகள் உயர்த்தவில்லை.
நேரம் ஆக ஆக காய்கறி கடைகள் மட்டுமல்லாமல் மளிகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கடைகளில் போதிய இடம் இல்லாததால் மக்கள் முண்டியடித்துக்கொண்டு வந்து பொருட்களை வாங்கினார்கள். சிங்காநல்லூர், பீளமேடு, போத்தனூர், வடவள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் வேன்களில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன.
மக்கள் கூட்டம் அதிகரித்ததை பார்த்தால் ஊரடங்கா என்று கேட்கும் அளவிற்கு கோவை மாநகரம் முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். நேற்று மட்டும் பகல் 3 மணிவரை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்ததால் 3 மணி வரை கூட்டம் காணப்பட்டது.
கோவை நகரில் உள்ள 15 போலீஸ் நிலைய பகுதிகளிலும் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்ட நெரிசலுடன் காணப்பட்ட பகுதிகளில் கடை உரிமையாளர்களை போலீசார் எச்சரித்து சென்றனர். இதனால் கடை உரிமையாளர்களே வாடிக்கையாளர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர்.
4 நாட்களுக்கு வெளியில் நடமாடமுடியாது என்பதால் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக நேற்று அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இதேபோல் பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் நிரப்ப அதிகம்பேர் வாகனங்களுடன் வந்தனர். இதனால் அங்கும் கூட்டம் காணப்பட்டது.
முழுமையான ஊரடங்கை சமாளிக்க பொருட்கள் வாங்க கோவை நகரில் அனைத்து பகுதிகளிலும் கூட்டம் காணப்பட்டதால் ஊரடங்கு மாதிரி தெரியவில்லை. இயல்பு நிலைமைபோல காணப்பட்டது.
Related Tags :
Next Story