முன்கூட்டியே அறிவிக்காததால் பெரம்பலூரில், முழு ஊரடங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது


முன்கூட்டியே அறிவிக்காததால் பெரம்பலூரில், முழு ஊரடங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது
x
தினத்தந்தி 26 April 2020 6:41 AM GMT (Updated: 26 April 2020 6:41 AM GMT)

பெரம்பலூரில் திடீரென அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.

பெரம்பலூர், 

பெரம்பலூரில் திடீரென அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.

சாலைகள் வெறிச்சோடின

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கலெக்டர் சாந்தா உத்தரவின் பேரில், பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையம் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்கவில்லை. உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட், மளிகை கடை, உணவகம் கூட இயங்கவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்கின. பெரம்பலூர் புதிய பஸ்நிலையம், அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின.

முழு ஊரடங்கினால் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி, போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலையில் தேவையில்லாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். முழு ஊரடங்கினால் பெரம்பலூர் நகர்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

இயல்பு வாழ்க்கை பாதித்தது

முழு ஊரடங்கு குறித்து, மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு குறித்து தெரியாத சில விவசாயிகள் உழவர் சந்தைக்கும், வியாபாரிகள் காய்கறி மார்க்கெட்டுக்கும் காய்கறிகளை விற்க கொண்டு வந்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் இந்த பகுதிகளில் 3 நாட்களுக்கு கடை போடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பினர். முழு ஊரடங்கு குறித்து தெரியாத பொதுமக்களில் சிலரும் நேற்று வழக்கம்போல் காய்கறிகள் வாங்க உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் முன்கூட்டியே வாங்கி இருப்பு வைக்காததால், பொதுமக்களில் பலர் காய்கறிகள், மளிகை பொருட்கள் கிடைக்காமல் அவதியடைந்தனர். பெரம்பலூர் மாவட்ட கிராமப்புறங்களில் ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் 3 நாட்களுக்கு பெரம்பலூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அந்த பகுதிக்கு கிராமப்புறங்களில் இருந்து யாரும் போகக்கூடாது என்று தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story