‘பொன்மகள் வந்தாள்’ திரைப்பட பிரச்சினை: இருதரப்பினரும் பேசி தீர்க்க நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
‘பொன்மகள் வந்தாள்’ திரைப்பட பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரும் பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கார், வேன் டிரைவர்கள், பந்தல் அமைப்பாளர்கள், பந்தல் தொழிலாளர்களுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த செலவில் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் விஜயா, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர் கனி, நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வணிக வைசிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி நிர்வாகம் மற்றும் சங்கம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதில் பள்ளி செயலாளர் வெங்கடேஷ், சங்க செயலாளர் பழனிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
திரைப்படம் பிரச்சினை
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் முழு ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது மருத்துவமனையில் 3 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளனர் என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஊரடங்கை கடைப்பிடிப்பதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்.
‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் வெளியிடுவது தொடர்பான பிரச்சினை தொடர்பாக சூர்யா, ஜோதிகா படங்களை திரையிட மாட்டோம் என்று பாதிக்கப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் அவர்கள் கருத்தினை கூறியுள்ளனர். இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்சினை. இதுதொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள், சங்கத்தினை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளேன். இரு தரப்பினரும் அமர்ந்து பேச வேண்டிய பிரச்சினை என்பதால் இருதரப்பும் பேசி தீர்க்க அரசு உதவி செய்யும். இந்த விஷயத்தில் முதல்வரின் ஆலோசனை பெற்று பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ குழு
இந்திய மருத்துவ கவுன்சில், தமிழகத்தில் 19 பேர் கொண்ட மருத்துவ குழு சேர்ந்து தினமும் நிலைமையை ஆய்வு அறிக்கை வழங்கி வருகின்றன. அதன் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமரும், முதல்வரும் முடிவு செய்வார்கள். திரைப்பட நல வாரியத்தை சேர்ந்த 7,459 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளோம். இதில் விடுபட்டவர்களுக்கு பத்திரிக்கையின் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளோம். திரைப்பட நலவாரியத்தில் பதிவு பெற்றவர்கள், தங்களது பதிவு எண்ணையும், தங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தெரிவித்தால் விடுபட்ட அனைவருக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Related Tags :
Next Story