ஓசூர் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இல்லை: 2-வது பரிசோதனையில் உறுதியானது
ஓசூர் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று 2-வது பரிசோதனையில் உறுதியானது.
ஓசூர்,
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருக்கிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கடந்த 24-ந் தேதி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த முதல் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, தான் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், கடந்த மாதம் 21-ந் தேதி தனது நிறுவனத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அதனால் நிறுவனத்தில் இருந்து அனைத்து ஊழியர்களையும் வீட்டிற்கு அனுப்பியதாகவும், 34 நாட்கள் தான் தனிமையில் இருந்ததாகவும், தனது நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று வந்ததால் தான் சுய பரிசோதனையாக மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த தனியார் நிறுவன ஊழியரை, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஓசூர் மருத்துவமனையில் முதல் கட்ட பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளும் சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.
இந்த 2 மாதிரிகளும் நேற்று ஆய்வு செய்யப்பட்டு மாலை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி 2 மாதிரிகளிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை சார்பில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தொடர்ந்து இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story