பெருந்துறை பகுதியில் வேலையிழந்து தவிக்கும் மெக்கானிக் தொழிலாளர்கள்


பெருந்துறை பகுதியில் வேலையிழந்து தவிக்கும் மெக்கானிக் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 26 April 2020 11:30 PM GMT (Updated: 26 April 2020 8:18 PM GMT)

பெருந்துறை பகுதியில் ஊரடங்கு உத்தரவால் மெக்கானிக் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

பெருந்துறை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. இதனால் பல்வேறு தொழில்கள் மட்டுமின்றி, அவைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மோட்டார் வாகனங்களை பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டறைகள், அவைகளில் வேலை செய்யும் மெக்கானிக்குகள், பாடி கட்டும் தொழிலாளர்கள், பெயிண்டர்கள், எலக்ட்ரீசியன்கள், ஸ்பிரிங் வேலை பார்ப்பவர்கள், சீட் கவர்கள் தைப்பவர்கள், ரேடியேட்டர் பழுது பார்ப்பவர்கள், கண்ணாடி பொருத்துபவர்கள், வாகனங்களுக்கு தண்ணீர் அடித்து சர்வீஸ் செய்பவர்கள், பஞ்சர் ஒட்டுபவர்கள் என்று எண்ணற்ற வேலைகளை செய்யும் தொழிலாளர்கள் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர். பெருந்துறையில் 350-க்கும் மேற்பட்ட லாரி மற்றும் வேன் பழுது பார்க்கும் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவைகளில், மெக்கானிக் பிரிவில் 50 பேரும், பாடி கட்டும் தொழிலில் 110 பேரும், பெயிண்டிங் பிரிவில் 100 பேரும், ஸ்பிரிங் வேலையில் 40 பேரும், எலக்ட்ரீசியன், ரேடியேட்டர், கண்ணாடி பொருத்துபவர், பஞ்சர் ஒட்டுபவர் என இதர தொழில் பிரிவுகளில், 200 பேருக்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர்.

மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழில் என்பது மாதம் முழுவதும் வருமானம் தரக்கூடிய தொழில் அல்ல. ஒரு நாள் வேலை கிடைக்கும், மறு நாள் வேலை இருக்காது. ஆனால் ஒருமாதத்தில் குறைந்தபட்சம் 15 நாளில் இருந்து 20 நாட்கள் வரை எப்படியும் வேலை கிடைத்து விடும். அதன் மூலம், மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை, ஒரு லாரி பழுது பார்க்கும் தொழிலாளி சம்பாதித்து வருகிறார்.

பெருந்துறை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட லாரி பழுது பார்க்கும் தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த ஒரு மாதமாக லாரிகளில் பழுது பார்க்கும் வேலை இல்லாமல் போனதால் இவர்கள் 500 பேரும் இழந்த வருவாய் சுமார் ரூ.75 லட்சம் ஆகும். கடந்த ஒரு மாதமாக, வெளியில் கடன் வாங்கித்தான் இவர்கள் தங்களது குடும்ப செலவுகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பெருந்துறை மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் குமார் கூறுகையில், ‘கொரோனா காரணமாக கடந்த ஒரு மாதமாக, எங்கள் தொழிலாளர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகின்ற னர். கொரோனா காரணமாக, வேலை இழந்த கட்டிட தொழிலாளர்கள், கைவினை தொழிலாளர்கள் என பலருக்கும், இந்த நேரத்தில் அரசு நிவாரண உதவிகளை செய்து வருகிறது. அவர்கள், அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் என்பதால் நிவாரண உதவிகள் அவர்களுக்கு கிடைத்து வருகிறது. ஆனால் நாங்கள், அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் பிரிவில் எங்களை பதிவு செய்யாமல் இருந்து விட்டோம். அதனால் எங்களுக்கு, அரசின் நிவாரண உதவி கிடைக்குமா? என்று தெரியவில்லை.

விரைவில் ஊரடங்கு உத்தரவு முடிந்து விட்டால் போதும். வேலைகள் எங்களை தேடி வரும் என்கிற நம்பிக்கை உள்ளது. அதுவரை நாங்கள் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதே கருத்தை வலியுறுத்தி பெருந்துறையில் கார், வேன்களை பழுது பார்க்கும் பட்டறை உரிமையாளர் சோமசுந்தரம் கூறும்போது, ‘சரக்கு வாகன போக்குவரத்து அனுமதித்த அரசு, அந்த வாகனங்கள் வழியில் பழுதடைந்து விட்டால் பழுது பார்க்க பட்டறைகள் இயங்க வேண்டும் என்பதை மறந்து விட்டது. இதற்கு பிறகாவது, பழுது பார்க்கும் பட்டறைகளை திறக்கவும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்கவும் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மோட்டார் வாகனங்கள் தடையின்றி இயங்க அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

Next Story