2-வது நாளாக முழு ஊரடங்கு: சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம்,
உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்த நோய் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்கவும் மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வெளியே வராமல் தங்களது வீடுகளில் முடங்கினர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று முழு ஊரடங்கால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. சேலம் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சில இடங்களில் வீட்டை விட்டு வெளியே வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.
மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல போலீசார் அனுமதித்தனர். இது தவிர மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற பொதுமக்களை ஆங்காங்கே போலீசார் வழிமறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். காலை வேளையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருந்தாலும் 11 மணிக்கு மேல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. ஆத்தூர், தலைவாசல், மேட்டூர், ஓமலூர், மேச்சேரி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், ஏற்காடு, சங்ககிரி, இளம்பிள்ளை, வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று சாலைகள் வெறிச்சோடி இருந்தன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
சேலம் தொங்கும் பூங்கா பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
சேலம் மாநகரை தவிர புறநகர் பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று (திங்கட்கிழமை) முதல் காய்கறி மற்றும் மளிகை கடைகள் வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, தமிழக அரசு அறிவித்துள்ள 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சேலம் மாநகராட்சியில் 3 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். நாளை (செவ்வாய்க் கிழமை) இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அனுமதி இல்லை. அதை மீறி வந்தால் காவல்துறை மூலம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் பல இடங்களில் காய்கறிகளை வாங்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கடைகள் எதுவும் திறக்கப்படாததால் மளிகை பொருட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story