மாங்காடு அருகே, டிரைவர் வெட்டிக்கொலை
மாங்காடு அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது 32). டிரைவரான இவருக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று மதியம் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ரஞ்சித்குமாரை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகரெட் பிடிக்கலாம் என்று கூறி வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சர்வீஸ் ரோடு அருகே உள்ள செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர் ரஞ்சித்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமாருடன் வந்தவர், அங்கிருந்து தப்பி ஓடி ரஞ்சித்குமாரின் உறவினர்களை அழைத்து வந்தார். அதற்குள் மர்மநபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
பெண் விவகாரமா?
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போரூர் உதவி கமிஷனர் சம்பத் தலைமையிலான மாங்காடு போலீசார், ரஞ்சித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ரஞ்சித்குமார் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. மலையம்பாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடந்ததாகவும், அதனை ரஞ்சித்குமார் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மர்மநபர்கள் ரஞ்சித்குமாரின் மர்ம உறுப்பையும் சரமாரியாக வெட்டி உள்ளதால் பெண் விவகாரமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story