தஞ்சையில், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் மூட்டை கட்டப்பட்ட பொம்மை வியாபாரம்
ஊரடங்கு காரணமாக தஞ்சையில், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பொம்மை வியாபாரிகள், தங்கள் தள்ளுவண்டி கடைகளை மூட்டை கட்டி வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
ஊரடங்கு காரணமாக தஞ்சையில், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பொம்மை வியாபாரிகள், தங்கள் தள்ளுவண்டி கடைகளை மூட்டை கட்டி வைத்துள்ளனர்.
சுற்றுலா தலங்கள் மூடல்
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்று தஞ்சை மாவட்டம். இங்கு தான் உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியகோவில் உள்ளது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இந்த கோவில் திகழ்ந்து வருகிறது. இது தவிர தஞ்சை அரண்மனை, அருங்காட்சியகம், கல்லணை, மனோரா போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இது தவிர பிரசித்தி பெற்ற கோவில்களான புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், சுவாமிமலை முருகன் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில்களும் இந்த மாவட்டத்தில்தான் அமைந்து உள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தஞ்சைக்கு வந்த வண்ணம் இருப்பர்.
மூட்டை கட்டப்பட்ட பொம்மை வியாபாரம்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக கோவில்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருவதை தவிர்க்கும் வகையில் இது மூடப்பட்டன.
கோவில்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் இந்த பகுதியில் பொம்மை விற்கும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 35 நாட்களுக்கும் மேலாக இவர்கள் பொம்மை வியாபாரத்தை மூட்டைகட்டி வைத்துள்ளனர். தஞ்சை பெரியகோவில் பகுதியில் மட்டும் 33 வியாபாரிகள், தஞ்சை தலையாட்டி பொம்மை உள்பட பல்வேறு பொம்மைகளை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இது தவிர அரண்மனை வளாகம், சுவாமிமலை முருகன் கோவில், மாரியம்மன் கோவில் பகுதியிலும் பொம்மை வியாபாரம் நடைபெறுவது வழக்கம்.
100 வியாபாரிகள்
இந்த பகுதிகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பொம்மை வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதியில் தயார் செய்யப்படும் தலையாட்டி பொம்மைகள், கொலு பொம்மைகள் மற்றும் சென்னை பகுதியில் தயார் செய்யப்படும் டான்சிங்டால் பொம்மைகளை வாங்கி வந்து விற்பனை செய்வார்கள்.
இதில் தலையாட்டி பொம்மைகள் ரூ.150 முதல், ரூ.250 வரை விற்பனை செய்யப்படும். இந்த வகை பொம்மைகள் தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் பொம்மையாகும். டான்சிங்டால் பொம்மைகள் ரூ.250 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படும்.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இதனை விரும்பி வாங்கி செல்வார்கள்.
தினமும் நடைபெறும் வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் இந்த வியாபாரிகள் அனைவரும் தங்களது குடும்பத்தை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த 35 நாட்களாக இவர்கள் வியாபாரம் இன்றி குடும்பம் நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகிறார்கள்.
தஞ்சை பெரியகோவில் பகுதியில் பெரும்பாலும் தள்ளவண்டியில் தான் வியாபாரம் செய்தார்கள். இவர்கள், தங்கள் தள்ளுவண்டி கடைகளை மூட்டைகட்டி சாலையோரத்தில் வைத்துள்ளனர்.
பொம்மைகள் தேக்கம்
இது குறித்து தஞ்சை பெரியகோவில் பகுதியில் பொம்மை வியாபாரம் செய்து வரும் ஜெயக்குமார் கூறியதாவது:-
நாங்கள் பெரியகோவில் பகுதியில் பொம்மை வியாபாரம் செய்து வந்தோம். பெரியகோவிலுக்கு புதிதாக தேர் செய்து விடப்பட்ட போது எங்கள் கடைகளை காலி செய்து புதிதாக கடைவைக்க இடம் ஒதுக்குவதாக கூறினார்கள். ஆனால் ஒதுக்கி தரவில்லை. நாங்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இடம் ஒதுக்குமாறு கூறினார்கள். ஆனால் வேறு இடத்தில் ஒதுக்கியதால் நாங்கள் அங்கு செல்லவில்லை. தற்போது பெரியகோவில் அருகே சோழன்சிலை அருகில் சாலையோரத்தில் கடை போட்டுள்ளோம். நிரந்தர கடையின்றி நாங்கள் தவித்து வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் வியாபாரிகள் வருமானம் இன்றி குடும்பம் நடத்துவதற்கே தவித்து வருகிறார்கள்.
இதனால் ஒவ்வெரு வியாபாரிடமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பொம்மைகள் தேங்கிக்கிடக்கிறது. ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்? இனி எப்போது சுற்றுலா தலங்கள், கோவில்கள் திறக்கப்பட்டு எங்களது வியாபாரம் நடைபெறும்? என்று தெரியவில்லை. தரைக்கடை வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்றார்கள். அதுவும் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, பெரியகோவில் பகுதியிலேயே எங்களுக்கு கடைகளும் ஒதுக்கித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story