முழு ஊரடங்கால், உர மூட்டைகளுடன் நிற்கும் லாரிகள்
முழு ஊரடங்கு காரணமாக இயக்கப்படாததால் உர மூட்டைகளுடன் லாரிகள், தஞ்சை குட்ஷெட்டில் நிற்கிறது.
தஞ்சாவூர்,
முழு ஊரடங்கு காரணமாக இயக்கப்படாததால் உர மூட்டைகளுடன் லாரிகள், தஞ்சை குட்ஷெட்டில் நிற்கிறது.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதில் குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை பொறுத்து நடைபெறும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி 20 ஆயிரம் எக்டேரில் நடைபெற்றுள்ளன. இது தவிர எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்கான நாற்றங்கால் தயாரிப்பது, நிலத்தை தயார் படுத்துவது போன்ற ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
364 டன் பொட்டாஷ் உரம்
இதற்கு தேவையான உரங்களும் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த உரங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.
அதன்படி தஞ்சைக்கு கடந்த சில வாரங்களாக யூரியா, பொட்டாஷ் உரங்கள் சரக்கு ரெயில் மூலம் வரவழைக்கப்பட்டு லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தஞ்சை, கும்பகோணத்திற்கு சரக்கு ரெயிலில் பொட்டாஷ் உரம் வந்தது. இதில் 6 ரெயில் பெட்டிகளில் 364 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வந்தது.
லாரிகளில் தேக்கம்
தஞ்சையில் இருந்து உரமூட்டைகள் வந்து லாரியில் இறக்கப்பட்டன. இவ்வாறு இறக்கப்பட்ட உரங்கள் லாரியில் தார்ப்பாய் மூலம் கட்டப்பட்டு அப்படியே குட்ஷெட் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் தற்போது 15-க்கும் மேற்பட்ட லாரிகள் உர மூட்டைகளுடன் நிற்கிறது.
இது குறித்து குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாலும், அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, விவசாயத்துக்கான உரம் போன்றவற்றை எடுத்துச்செல்லும் நாங்கள் வழக்கம்போல லாரிகளை இயக்கி வருகிறோம். தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 364 டன் பொட்டாஷ் உரம் வந்தது. இந்த உரங்கள் நேற்று முன்தினம் மாலை வந்ததால் ரெயிலில் இருந்து லாரிகளில் இறக்கப்பட்டன.
முழு ஊரடங்கு
வாரத்தில் 6 நாட்கள் உரக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தான் திறந்திருக்கும். ஆனால் நேற்று தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் எடுத்துச்சென்றாலும் கடைகளில் இறக்க முடியாது. இதனால் நாங்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்குப்பிறகு லாரிகளை இயக்க வேண்டாம் என கூறி விட்டோம்.
அதனால்தான் நேற்று முன்தினம் மாலை இறக்கப்பட்ட உரங்கள் லாரியில் உள்ளது. இந்த உரங்கள் அனைத்தும் இன்று(திங்கட்கிழமை) காலை சம்பந்தப்பட்ட கடைகளுக்கு எடுத்துச்செல்லப்படும்”என்றார்.
Related Tags :
Next Story