இடி, மின்னல், பலத்த காற்றுடன் சென்னை, புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த கோடை மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி


இடி, மின்னல், பலத்த காற்றுடன் சென்னை, புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த கோடை மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 27 April 2020 4:45 AM IST (Updated: 27 April 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, புறநகர் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கோடை மழை பரவலாக பெய்தது. மழை காரணமாக வெப்பம் சற்று தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை, 

தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற பருவகாலங்களில் மழை கிடைக்கும். இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிக அளவு மழையை பெறும். தென்மேற்கு பருவமழை காலத்தை பொறுத்தவரையில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே அதிகளவில் மழை இருக்கும்.

இதுதவிர கோடை மழையில் தமிழகத்தில் ஓரளவு மழை இருக்கும். அந்த வகையில் வெப்பசலனத்தால் கோடை மழை மார்ச் மாதத்தில் இறுதியில் இருந்து ஜூன் மாதத்தின் தொடங்கும் தென்மேற்கு பருவமழை காலத்துக்கு முன்பு வரை பெய்யும்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கோடை மழை எப்போது பெய்யும்? என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

சென்னையில் பெய்தது

அதன்படி, கடந்த வாரத்தில் இருந்து கோடை மழை தமிழகத்தில் ஓரளவு பெய்ய தொடங்கி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போதும் மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடைமழை பரவலாக பெய்து இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் கடந்த 9-ந்தேதி கோடை மழை பெய்தது. கொரோனா பீதிக்கு மத்தியிலும், வறுத்து எடுத்து வந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று இடைவெளி கிடைத்தது போல் அந்த மழை இருந்தது.

அதன்பின்னர், தொடர்ச்சியாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று சென்னையில் அதிகாலை 5.30 மணிக்கு மேல் சாரல் மழையாக தொடங்கி, சிறிது நேரத்தில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் பெய்தது.

சென்னை அயனாவரம், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்ப்பேட்டை, அம்பத்தூர், சோழிங்கநல்லூர் உள்பட சென்னைக்குட்பட்ட பகுதிகளில் மழை ஓரளவுக்கு பெய்தது.

60 மரங்கள் சாய்ந்தன

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. சென்னை கிண்டி நாகிரெட்டி தோட்டம் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்காக இரும்பு தகரத்தால் கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது.

பலத்த காற்றினால் இந்த இரும்பு தகரங்கள் பறந்து சென்று அருகில் உள்ள ஓட்டு வீடுகளில் விழுந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த ஓடுகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியில் சுமார் 60 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மின் கம்பிகள் அறுந்து பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சாலையோரம் விழுந்து கிடந்த மரங்களை ஊழியர்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர். மின் வாரிய அதிகாரிகள் நேற்று காலை முதல் தொடர் பணியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று மாலை வரை பல இடங்களில் மின்தடை நீடித்தது.

அதேபோல் மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், புழல், செங்குன்றம், சோழவரம் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலை ஓரங்களில் இருந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

உயர்மின் அழுத்த கம்பி அறுந்தது

வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு மணலி எம்.எப்.எல். அருகில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் அலமாதி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல மிக உயரமான பாதுகாப்பான தூண்கள் நிறுத்தப்பட்டு தரமான கனமான வயர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று காலை பெய்த கடுமையான காற்றுடன் கூடிய மழையில் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் பக்கிங்காம் கால்வாய் ஓரமாக உள்ள உயர் மின் அழுத்த கம்பி அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

அதேபோல் ஆவடி, காமராஜர் நகரில் கொய்யா மரம் ஒன்றும் காற்றின் வேகத்தில் சாய்ந்து தெருவில் விழுந்தது. கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, எத்திராஜ் சாலை மற்றும் எவரெடி காலனி, பார்வதி நகர் ஆகிய 5 இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்தது.

கடந்த சில நாட்களாக ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளுக்கு முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் கொடுமையால் முகம் சுழித்தபடி, வீடுகளில் பொழுதை கழித்த மக்களுக்கு, நேற்று அதிகாலையில் இருந்து சில மணி நேரங்கள் பெய்த இந்த கோடைமழையால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் இன்றும் (திங்கட்கிழமை) வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story