தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் டிரோன் மூலம் கண்காணிப்பு - கலெக்டர் வினய் தகவல்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரையில் முழு ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மதுரை மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ் தலைமை தாங்கினார். காவல்துறை தலைவர் முருகன், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் வினய் பேசும் போது கூறியதாவது:-
மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் அந்த பகுதியில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் குறித்த விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதி மக்கள் ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவிற்கு கூட செல்லக்கூடாது. ஒவ்வொரு தெருக்களிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும். அப்பகுதி மக்களின் செயல்பாடுகளை கேமரா மற்றும் டிரோன் மூலம் கண்காணிக்க வேண்டும்.
தேவையில்லாமல் நடமாடுபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதவண்ணம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
அங்குள்ள முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், புற்று நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்களை கண்டறிந்து தினமும் அவர்களது உடல் நிலையை கண்காணிக்க வேண்டும். இந்த பகுதிகளில் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் அரசு வழிகாட்டுதலின்படி தயார் செய்து வழங்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்- 04522546160, வாட்ஸ்-அப் எண்- 9597176061 மற்றும் மதுரை மாநகராட்சி அலைபேசி எண் 8428425000 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story