மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது - 204 பேர் பலி
மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 204 பேர் பலியாகி உள்ளனர்.
மும்பை,
நாட்டின் நிதி தலைநகரான மும்பையை ஆட்கொல்லி கொரோனா அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கொத்து கொத்தாய் அதிகரித்து வருகிறது.
இதனால் நகரில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின்(கன்டெய்ன்மென்ட் சோன்) எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதேபோல ஒர்லி, தாராவி போன்ற மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகளிலும் வைரஸ் பரவலின் வேகம் விஸ்ரூபம் எடுத்து உள்ளது.
இந்தநிலையில் நேற்று மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது நேற்று புதிதாக 324 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதனால் நிதி தலைநகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 194 ஆக அதிகரித்து உள்ளது.
204 பேர் பலி
இதேபோல மும்பையில் மேலும் 13 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இதுவரை ஆட்கொல்லி வைரசுக்கு 204 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று 135 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். மும்பையில் மொத்தம் 897 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.
8 ஆயிரத்தை தாண்டியது
இதேபோல மராட்டியம் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் நேற்று மட்டும் புதிதாக 440 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 68 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல நேற்று மாநிலத்தில் 19 பேர் ஆட்கொல்லி கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால் இதுவரை இங்கு நோய் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 342 ஆகி உள்ளது.
Related Tags :
Next Story